Published : 29 Dec 2021 06:58 AM
Last Updated : 29 Dec 2021 06:58 AM

தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய வெள்ள நிவாரண நிதியை மத்தியபாஜக அரசு உடனடியாக வழங்கவேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் 137-வதுநிறுவன நாள் விழா, சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. 150 அடி உயர கொடிக் கம்பத்தில் கட்சிக் கொடியை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஏற்றிவைத்து, சேவாதள தொண்டர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து மகாத்மா காந்தி, நேரு, காமராஜர், சர்தார் வல்லபபாய் பட்டேல் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட தலைவர்களின் உருவப் படங்களுக்கு அழகிரி மற்றும் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மக்களவை உறுப்பினர் செல்லக்குமார், காங்கிரஸ் ஊடகப் பிரிவு மாநிலத் தலைவர் ஆ.கோபண்ணா, மாநிலபொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன், முன்னாள் மாநில பொருளாளர் நாசே ராமச்சந்திரன், மகளிர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் சுதா ராமகிருஷ்ணன், மத்திய சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் சிவ.ராஜசேகரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:

கடந்த மாதத்தில் பெய்த கனமழையால் டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் மூழ்கி சேதமடைந்தன. இதுவரை மத்தியஅரசு வெள்ள நிவாரணம் வழங்கவில்லை. எனவே, வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் பள்ளிக் குழந்தைகளுக்கு கைத்தறி சீருடைகளை வழங்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு சிறப்பாகசெயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

காங்கிரஸ் இல்லாமல் அமையும் எந்தக் கூட்டணியும் பாஜகவுக்குதான் பலனளிக்கும். இதை பாஜக கூட்டணியில் நீண்ட காலம் இருந்த சிவசேனா கட்சியே தெரிவித்துள்ளது. நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வெறுப்பு பேச்சு பேசி வருகிறார். இது கடும் கண்டனத்துக்குரியது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x