Published : 29 Mar 2016 09:08 PM
Last Updated : 29 Mar 2016 09:08 PM

அதிமுகவுக்கு ஒரே மாற்று திமுகதான்: கருணாநிதி உறுதி

அதிமுகவுக்கு ஒரே மாற்று திமுகதான் என்ற நிலைத்துவிட்ட உண்மையை நீர்த்துப்போகச் செய்ய சிலர் முயற்சித்து வருவதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட கடித வடிவிலான அறிக்கையில், ''நான் விரும்பி ஏற்றுக்கொண்டுள்ள ஜனநாயகப் பாதையில் இதுவரை திமுக சந்திக்காத களங்கள் இல்லை. காணாத வெற்றிகள் இல்லை. பெறாத விழுப்புண்கள் இல்லை.

1989-ல் திமுக ஆட்சியில் அமர்ந்தது. 1991-ல் அதிமுக, 1996-ல் மீண்டும் திமுக, 2001-ல் அதிமுக, 2006-ல் திமுக, 2011-ல் அதிமுக என மாறிமாறி ஆட்சி வாய்ப்பு அமைந்து வருகிறது. அதன்படி பார்த்தால் வரும் 2016 தேர்தலில் திமுக ஆட்சி அமைக்கும் என நடுநிலையாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். இந்தத் தேர்தலில் நாம் பெறப்போகும் வெற்றி, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் சொந்தமான மகத்தான வெற்றி.

5 முறை ஆட்சியில் இருந்தபோது திமுக ஆற்றிய சாதனைகள் பட்டிதொட்டியெல்லாம் இன்றும் நிலைத்துள்ளன. உடனடி தேவைகளை நிறைவேற்றுவதற்கான நலத் திட்டங்கள், நீண்டகால சமூக பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் அடிப்படை கட்டமைப்புத் திட்டங்கள், நதிநீர் இணைப்புத் திட்டங்கள், கல்வி, விவசாயம், தொழில் திட்டங்களை ஒருபோதும் மக்கள் மறக்க மாட்டார்கள்.

அதனால்தான் எப்போதெல்லாம் அதிமுக ஆட்சியில் இருக்கிறதோ, அப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வந்தே ஆக வேண்டும் என மக்கள் வாக்களிக்கின்றனர். திமுகவுக்கும் தமிழக மக்களுக்கும் இடையே உள்ள உறவு இறுக்கமாக பின்னிப் பிணைந்துள்ள உறவு. அதை எந்த வீண் புரளிகளாலும், விதண்டாவாதங்களாலும், விஷமப் பிரச்சாரங்களாலும் புரட்டிப் போட்டுவிட முடியாது.

அதிமுகவுக்கு ஒற்றை மாற்று திமுகதான் என்பது தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்றுவிட்ட நிஜம். இதை யாராலும் அசைக்க முடியாது. சூழ்நிலை தங்களுக்கு சாதகமாக இல்லை என்பதால் ஆளுங்கட்சியினர், சிலரைப் பிடித்து திமுகவும் மோசம், அதிமுகவும் மோசம் என பேச வைத்துள்ளனர். அதிமுகவுக்கு ஒற்றை மாற்று என்று நிலைத்து விட்ட உண்மையை நீர்த்துப் போகச் செய்ய சிலர் அரசியலின் தரத்தை குறைக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.

இந்தத் தேர்தலில் பலமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இதுவரை தமிழகம் கண்டிராத அதிசயமாக சில முதல்வர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். காமராஜரோ, அண்ணாவோ, எம்.ஜி.ஆரோ, நானோ முதல்வர் வேட்பாளராக அறிவித்துக்கொண்டு இதுவரை களம் கண்டதில்லை.

முதல்வராக கனவு காண்பது அவரவர் உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது. ஆனால், பலமுனைப் போட்டியால் திமுகவுக்கு வாய்ப்பு குறைவாகவே உள்ளது என சிலர் தவறான வாதத்தை பரப்ப முயற்சிக்கின்றனர். 1989, 1996-ல் பலமுனை போட்டி ஏற்பட்டபோது திமுகதான் வெற்றி பெற்றது. ஏற்கெனவே தமிழகம் மாற்று அரசியல், பலமுனை போட்டி ஆகியவற்றை சந்தித்துள்ளது என்பதை கடந்த கால வரலாறு நமக்கு சுட்டிக் காட்டுகிறது.

சமூக, பொருளாதார வீழ்ச்சியிலிருந்து தமிழகத்தை காப்பாற்ற திமுகவுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டனர். அரசியல் மாற்று குறித்து ‘தி இந்து’ (தமிழ்) நாளிதழில் ஆய்வு செய்து கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதில் அரசியல் மாற்று பேசிவிட்டு 3-வது அணிக்கான சாத்தியத்தை நாசமாக்கிவிட்டனர் என கூறப்பட்டுள்ளது.

எனவே, எப்படி கணக்கு போட்டாலும் வரும் தேர்தலில் திமுகதான் வெற்றி பெறும். இது கல் மேல் எழுத்து. எனவே, திமுக தொண்டர்கள் இன்றே களத்தில் கவனம் செலுத்த வேண்டும். இதுவரை யாராலும் முடியாத சாதனையை படைக்கும் ஆற்றல் திமுகவுக்கு உண்டு என்பதை உறுதிப்படுத்தும் வகையில் திமுகவினர் பணியாற்ற வேண்டும்'' என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x