Published : 27 Jun 2014 01:03 PM
Last Updated : 27 Jun 2014 01:03 PM

நதிநீர்ப் பிரச்சினை: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சரமாரி கேள்வி

நதிநீர்ப் பிரச்சினையில் கேரள அரசின் நிலைப்பாட்டை முன்வைத்து, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி சரமாரி கேள்விகளைத் தொடுத்துள்ளார்.

முல்லைப் பெரியாறு உள்ளிட்ட நதிநீர்ப் பிரச்சினைகளில் தமிழ்நாட்டின் உரிமை முழுமையாக நிலைநாட்ட முதல்வர் ஜெயலலிதா உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று அவர் கூறைகூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "கேரள சட்டசபையில் சில நாட்களுக்கு முன்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஜெமிலா பிரகாசம் என்பவர் கூறுகையில், "சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற தேசிய அணைகள் பாதுகாப்புக் கமிட்டி கூட்டத்தில், முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், திருணக் கடவு மற்றும் பெருவாரிப்பள்ளம் ஆகிய நான்கு அணைகளும் தமிழ்நாட்டுக்குச் சொந்தம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், கூட்டத்தில் கலந்துகொண்ட கேரள அதிகாரிகள் அதை எதிர்க்கவில்லையே?" என்று கேட்டிருக்கிறார்.

இதற்கு விளக்கமளித்த முதலமைச்சர் உம்மன்சாண்டி "முல்லைப்பெரியாறு உட்பட நான்கு அணைகளும் இப்போது கேரளாவின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. அந்த அணைகள் முழுக்க முழுக்க கேரளாவுக்குச் சொந்தமானவை. 2009ஆம் ஆண்டு வரை இந்தியாவில் உள்ள பெரிய அணைகளின் பட்டியலில் இந்த நான்கு அணைகளும் தமிழ்நாட்டுக்குச் சொந்தமானவை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் கேரளா அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து 2012ஆம் ஆண்டு அந்த நான்கு அணைகளும் கேரளாவுக்குச் சொந்தம் என்று மாற்றப்பட்டது" என்று தெரிவித்திருக்கிறார்.

மத்திய நீர்வள ஆணையத்தின் கூட்டம் 2013 டிசம்பர் 27ஆம் தேதி நடந்தது. அந்தக் கூட்டத்துக்குப் பிறகு ஜுன் 2014 வரை உள்ள விபரங்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெரிய அணைகள் பற்றிய தேசியப் பதிவேடு வெளியிடப்பட்டது. அந்தப் பதிவேட்டில் முல்லைப் பெரியாறு, திருணக்கடவு, பெருவாளிப்பள்ளம், பரம்பிகுளம் ஆகிய நான்கு அணைகளும் கேரள அணைகள் பட்டியலில் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளன என்றும்; தமிழக அணைகளின் பட்டியலில் இவை சேர்க்கப்பட வில்லை என்றும் செய்தி வெளிவந்துள்ளது.

கடந்த 2009 வரை இந்த நான்கு அணைகளும் தமிழகத்தின் பட்டியலில் இருந்தன. கேரளாவின் வலியுறுத்தலைத் தொடர்ந்தே இந்த நான்கு அணைகளும் கேரள பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மாற்றம் 2012ஆம் ஆண்டு நடைபெற்றதாக கேரள முதலமைச்சர் கூறியிருக்கிறார்.

23-6-2014 அன்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட ஓர் அறிக்கையில், "காவேரி நதி நீர்ப் பிரச்சினையிலும், முல்லைப் பெரியாறு நதி நீர்ப் பிரச்சினையிலும் எப்படி தமிழ் நாட்டின் உரிமை என்னால் நிலைநாட்டப்பட்டதோ, அதேபோன்று பாலாறு நதி நீர்ப் பிரச்சினையிலும் தமிழ்நாட்டின் உரிமை நிலை நாட்டப்படும்" என்று தன்னைத் தானே புகழ்ந்து கொண்டாரே, கேரள முதலமைச்சர் நான்கு அணைகளும் 2012ஆம் ஆண்டு கேரளப் பட்டியலிலே மாற்றப்பட்டன என்று சொல்லியிருக்கிறாரே, இந்த உரிமை யாரால் நிலை நாட்டப்பட்டது?

காவேரி நதி நீர்ப் பிரச்சினையிலும், முல்லைப் பெரியாறு நதி நீர்ப் பிரச்சினையிலும் தன்னால் தமிழ்நாட்டின் உரிமை நிலைநாட்டப்பட்டது என்று சொல்லியிருக்கிறாரே, காவேரி நதி நீர்ப் பிரச்சினை தீர்ந்துவிட்டதா? மேலாண்மை வாரியம் உருவாக்கப்பட்டு விட்டதா? முல்லைப் பெரியாறு நதிநீர்ப் பிரச்சினையில் தமிழ்நாட்டின் உரிமை முழுமையாக நிலைநாட்டப்பட்டு விட்டதா?

கேரள சட்டசபையில் அந்த மாநில நீர்வளத் துறை அமைச்சர் பி.ஜே. ஜோசப் கூறும்போது, "தேசிய நீர்வள மேம்பாட்டு முகமை, கேரளத்தின் பம்பை, அச்சன்கோவில் ஆறுகளை தமிழகத்தின் வைப்பாறுடன் இணைக்க யோசனை தெரிவித்துள்ளது; பம்பை, அச்சன் கோவில் ஆறுகளின் நீர், விவசாய மற்றும் பாசன பயன்பாட்டிற்கே சரியாக உள்ளது; தேவைக்கு அதிகமாக நீர் இருப்பதில்லை; இது தொடர்பாக வல்லுநர் குழு ஒன்று ஏற்கனவே அறிக்கை சமர்ப்பித்துள்ளது; எனவே நதிகள் இணைப்புத் திட்டம் சாத்தியமில்லை" என்று தெரிவித்திருக்கிறாரே, இதற்கு தமிழக அரசின் பதில் என்ன? இது தான் ஜெயலலிதா; நதி நீர் இணைப்புப் பிரச்சினையில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்வதன் லட்சணமா?" என்று கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x