Published : 07 Mar 2016 10:48 AM
Last Updated : 07 Mar 2016 10:48 AM

பெண்களுக்குரிய உரிமை இன்னமும் அவர்களுக்கு கிடைக்கவில்லை: விஜயகாந்த் மகளிர் தின வாழ்த்துச் செய்தி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

மனித குலத்தில் ஆண்களும், பெண்களும் சரிசமமாக இருக்கிறார்கள். ஆனால் இந்தியா சுதந்திரம் அடைந்து ஆண்டுகள் பல உருண்டோடியும், பெண்களுக்குரிய உரிமையும், முக்கியத்துவமும் இதுவரையிலும் அவர்களுக்கு முழுமையாக கிடைத்தபாடில்லை. குறிப்பாக பொருளாதாரத்தில் ஆண்களை சார்ந்தே பெண்கள் இருக்கவேண்டிய கட்டாயம் தற்போதும் தொடர்கிறது. வேலை வாய்ப்பில் உரிய பிரதிநிதித்துவம் பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை. எனவே சமூகம், அரசியல், பொருளாதார வளர்ச்சி என அனைத்திலும் பெண்கள் முழுப்பங்கெடுக்கும் போதுதான் மாற்றம் ஏற்படும். சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒருபங்கு பெண்கள் இருக்கவேண்டும் என்கின்ற குரல் ஓங்கி ஒலித்தாலும், அதை செயல்படுத்த ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. இதை பார்க்கும்போது பெண்களுக்கு சரிபாதி இடஒதுக்கீடு என்பது ஏட்டளவில் மட்டுமே உள்ளதாக தெரிகிறது.

பெண்ணுக்கு திருமணம் என்றாலே வரதட்சணை என்ற பெயரில் வியாபாரம் ஆக்கப்படுகிறது. பெண்கள் உயர்கல்வி பயில வேண்டுமென்றால் குறைந்த கட்டணத்தில் கல்வி கற்கும் நிலை தமிழ்நாட்டில் இல்லை. இதையெல்லாம் மீறி மிகுந்த சிரமத்திற்கு இடையே கல்வி கற்றாலும், அதற்குரிய வேலைவாய்ப்பு இல்லை. அப்படியே வேலை வாய்ப்பு இருந்தாலும், சுற்றுப்புற சூழ்நிலைகளால் பல்வேறு வன்கொடுமைகளுக்கு பெண்கள் ஆளாகிறார்கள்.

இதை தடுக்க பெண்களின் வளர்ச்சிக்கென சிறப்புத் திட்டங்களை உருவாக்கிட வேண்டும். தமிழகத்தில் மதுவால் கணவனையும், மகனையும், சகோதரனையும்இழந்த தாய்மார்களும், சகோதரிகளும் மதுவின் கொடுமையை தினந்தோறும் அனுபவித்து வருகிறார்கள். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பெண்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படவேண்டும். அந்த விழிப்புணர்வு “தீ” தமிழகம் முழுவதும் பரவி, ஆட்சி மாற்றத்தை உருவாக்கிடவேண்டும்.

முற்போக்கு சிந்தனைகள் மூலமே ஒரு சமுதாயம் முன்னேற முடியும். சமுதாயத்தில் பாதியாக உள்ள பெண்களுக்கு கல்வியும், வேலை வாய்ப்பும், சம உரிமையும் கிடைத்துவிட்டால், ஆண்களுக்கு நிகராக பெண்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதையும், பெண்களுக்குரிய வசதியும், வாய்ப்பும் கிடைத்தவர்கள், சிறப்பாக பணியாற்றுவார்கள் என்பதையும் பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துள்ளார்கள். பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வரும் பெண்களின் சாதனைகளே இதற்கு சான்றாக அமைந்துள்ளது. பெண்கள் தற்சார்பு பெற்று தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும், அனைத்து துறைகளிலும் முன்னேறி நல்வாழ்வு பெறவும், தேமுதிக சார்பில் எனது மகளிர் தின நல்வாழ்த்துகளை இந்த இனிய நாளில் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தனது மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x