Last Updated : 28 Dec, 2021 09:21 PM

 

Published : 28 Dec 2021 09:21 PM
Last Updated : 28 Dec 2021 09:21 PM

புதுச்சேரியில் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று: தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட ஆளுநர் தமிழிசை உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரியில் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியானதையடுத்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் வழிமுறைகளையும் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ள சூழ்நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

புதுச்சேரியில் கரேனா பரவல் பெருமளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் இரண்டு நபர்களுக்கு ஓமைக்ரான் தொற்று ஏற்பட்டிருப்பது ஒரு புதிய சவாலாக அமைந்திருக்கிறது. இந்நிலையில், துணைநிலை ஆளுநர் தமிழிசை கரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் வழிமுறைகளையும் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி இன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு: தொற்று கண்டறியப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது, அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து பரிசோதனை செய்வது, கண்காணிப்பில் வைப்பது போன்ற நடைமுறைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும்.

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி முகக்கவசம் அணிதல், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற கரோனா வழிமுறைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

மக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் அனைத்து வகையான தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். சமூக இடைவெளியை உறுதிப்படுத்தவேண்டும்.

கரோனா நடைமுறைகள் குறித்து அறிவிப்புகள் செய்ய வேண்டும். அவை பின்பற்றப்படுவதை கண்காணிக்க சிறப்பு குழுக்களை பணியில் அமர்த்த வேண்டும். கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள வருபவர்கள் முகக் கவசம் அணிந்து இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். வெப்பமானி உதவியோடு உடல் வெப்பத்தை பரிசோதனை செய்ய வேண்டும்.

மக்கள் கூடும் இடங்களில் சுகாதாரத்துறை மாதிரி பரிசோதனைகளை நடத்த வேண்டும். தொற்று அறிகுறி காணப்பட்டவர்களை தனிமைப்படுத்தி மருத்துவ உதவி அளிக்கப்படவேண்டும்.

சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளும் கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்குத் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x