Published : 20 Jun 2014 10:00 AM
Last Updated : 20 Jun 2014 10:00 AM

‘மகளிர் மட்டும்’ ஷேர் டாக்ஸி அறிமுகம்

பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண் ஊழியர்கள் ஆகியோருக்கு பயன்படும் விதமாக பெண்களுக்காக பெண்களே ஓட்டும் ஷேர் டாக்ஸி, சென்னையில் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

சென்னையில் பெண்கள் இயக்கும் பேருந்துகள், ஆட்டோக்கள் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில் புதிதாக பெண்கள் ஓட்டும் ஷேர் டாக்ஸி, சென்னையில் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘டச்சஸ் ஹேண்ட்’ என்ற அமைப்பு ‘பிங்க் டாக்ஸி’ என்ற பெயரில் பெண்களுக்கான ஷேர் டாக்ஸியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதை பெண் ஓட்டுநர்கள் மட்டுமே ஓட்டுவார்கள். பெண்கள் மட்டுமே பயணிக்க முடியும்.

இதுகுறித்து டச்சஸ் ஹேண்ட் அமைப்பை சேர்ந்த ஷைலஜா கூறியதாவது:

பெண்களுக்காக பெண்களே ஓட்டும் ‘பிங்க் டாக்ஸி’யை சென் னையில் முதல்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளோம். முதல்கட்டமாக, கார் ஓட்டத் தெரிந்த 3 பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வங்கிக் கடன் உதவியுடன் 3 ஷேர் டாக்ஸிகள் வாங்கிக் கொடுத்துள்ளோம். இந்த டாக்ஸி பெண்களுக்காக மட்டுமே இயக்கப்படும். ஷேர் டாக்ஸிக்கான கட்டணம், இன்னும் எத்தனை டாக்ஸிகள் பயன்பாட்டுக்கு விடப்படுகின்றன என்பது போன்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

இந்த டாக்ஸிகள் சென்னை பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பள்ளி, கல்லூரி மாணவிகள், கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிந்துவிட்டு இரவு தாமதமாக வீடு திரும்பும் பெண்கள் ஆகியோரைக் கருத்தில் கொண்டே இந்த ஷேர் டாக்ஸியை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

இவ்வாறு ஷைலஜா கூறினார்.

ஷேர் டாக்ஸி ஓட்டுநர்களில் ஒருவரான ஜெயலட்சுமி கூறுகையில், ‘‘3 ஆண்டுகளுக்கு முன்பு ஓட்டுநராக பயிற்சி பெற்றேன். தொடர்ந்து முழுமையாக கார் ஓட்டும் வாய்ப்பு கிடைக்காததால் டைலராக வேலை செய்து வந்தேன். தற்போது டச்சஸ் ஹேண்ட் அமைப்பினர் வங்கிக் கடன் உதவியுடன் ஷேர் டாக்ஸி வாங்கிக் கொடுத்துள்ளனர். பெண்கள் இதை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

ஜெயலட்சுமி மட்டுமன்றி நவோவி, தேவகி ஆகிய 2 பெண்களும் ஷேர் டாக்ஸி ஓட்டுநராக உள்ளனர். ‘பிங்க் டாக்ஸி’யின் முதல் பயணத்தை நடிகை ரம்யா கிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x