Published : 28 Dec 2021 07:11 AM
Last Updated : 28 Dec 2021 07:11 AM

உள்ளாட்சி மற்றும் அரசு துறைகளில் ரூ.3,300 கோடி மின்கட்டணம் நிலுவை: வசூலிக்கும் பணியில் மின்வாரியம் தீவிரம்

சென்னை: மத்திய அரசின் உத்தரவையடுத்து, அரசு துறைகளில் நிலுவையில் உள்ள மின்கட்டணத் தொகையான ரூ.3,300 கோடியை வசூலிக்கும் நடவடிக்கையில் மின்வாரியம் ஈடுபட்டுள்ளது.

வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், மத்திய, மாநில அரசுஅலுவலகங்கள் உள்ளிட்டவற்றுக்கு தமிழ்நாடு மின்வாரியம் மின்விநியோகம் செய்து வருகிறது.

மின்பயன்பாடு கணக்கெடுத்த தேதியில் இருந்து குறிப்பிட்ட காலஅவகாசத்துக்குள் மின்கட்டணத்தைச் செலுத்தவில்லையெனில், மின்இணைப்பு துண்டிக்கப்படும்.

இதனால், வீடுகள், தனியார் மற்றும் மத்திய அரசு நிறுவனங்கள் குறித்த காலத்துக்குள் மின்கட்டணத்தைச் செலுத்தி விடுகின்றன. ஆனால், தமிழக அரசின் உள்ளாட்சி உள்ளிட்ட துறைகள் முறையாக மின்கட்டணம் செலுத்துவது கிடையாது.

இதனால், தற்போதைய நிலவரப்படி ஊராட்சிகள் ரூ.680 கோடியும், மாநகராட்சிகள் ரூ.490கோடியும், நகராட்சிகள் ரூ.210 கோடியும், பேரூராட்சிகள் ரூ.42கோடியும் என கட்டணம் செலுத்தாமல் நிலுவையில் உள்ளன.

இதில், அதிகபட்சமாக குடிநீர்வாரியம் ரூ.1,750 கோடி நிலுவை வைத்துள்ளது. இதன்படி, மொத்தமாக அனைத்து துறைகளும் செலுத்த வேண்டிய மின்கட்டண நிலுவை ரூ.3,310 கோடியாகும்.

ஏற்கெனவே, கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் மின்வாரியம், இந்த நிலுவைத் தொகை காரணமாக மேலும் நிதிச் சுமை அதிகரித்துள்ளது. எனவே மின்கட்டணம் செலுத்தாவிட்டால் மின்விநியோகத்தை துண்டிக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட் டுள்ளது.

இதையடுத்து, நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை வசூலிக்கும் நடவடிக்கையில் மின்வாரியம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x