Published : 28 Dec 2021 07:06 AM
Last Updated : 28 Dec 2021 07:06 AM

எம்பிசி வகுப்பினருக்கு பழைய இடஒதுக்கீட்டு முறை; எம்இ, எம்டெக்., மருத்துவ படிப்புகளுக்கு விரைவில் கலந்தாய்வு: உச்ச நீதிமன்ற உத்தரவைப் பின்பற்ற தமிழக அரசு முடிவு

சென்னை: எம்பிசி வகுப்பினருக்கு பழைய இடஒதுக்கீட்டு முறையில் எம்இ, எம்டெக், எம்ஆர்க் மற்றும் மருத்துவம், கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை விரைவில் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில் பொறியியல் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இதனிடையே, வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள்தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், 10.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கான அரசாணையை ரத்து செய்தது. உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்துதமிழக அரசும் பாமகவும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளன. அவற்றை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. தற்போது இவ்வழக்கு நிலுவையில் உள்ளது.

கலந்தாய்வு தள்ளிவைப்பு

உயர் நீதிமன்ற தடைக்கு முன்பாக 10.5 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் பிஇ, பிடெக் மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், உயர் நீதிமன்ற தடை காரணமாக எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்பிளான் ஆகிய முதுநிலை பொறியியல், தொழில்நுட்ப படிப்புகளுக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகத்தால் திட்டமிட்டபடி கடந்த நவம்பரில் நடத்த முடியவில்லை. எம்இ, எம்டெக் மட்டுமின்றி, எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிவிஎஸ்சி சேர்க்கைகளுக்கான கலந்தாய்வுகளும் உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவு காரணமாக தள்ளி வைக்கப்பட்டன.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றி, எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்பிளான் படிப்புகள் மற்றும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை எம்பிசி வகுப்பினருக்கான பழைய இடஒதுக்கீட்டு (20 சதவீதம்) நடைமுறையை பின்பற்றி நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

முதல்கட்டமாக, முதுநிலை பொறியியல் தொழில்நுட்ப படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்த அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது. அரசின் அனுமதியை தொடர்ந்து, எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்பிளான் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வெகுவிரைவில் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் கூறியுள்ளார்.

மருத்துவப் படிப்பை பொறுத்தவரை, எம்பிபிஎஸ் அகில இந்திய ஒதுக்கீட்டில், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தவழக்கு முடிந்த பின்னர்தான் அகிலஇந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படும். இக்கலந்தாய்வின் முதல் சுற்று முடிந்த பின்னரே எம்பிபிஎஸ் கலந்தாய்வு நடைபெறும். கால்நடை மருத்துவபடிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்த அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கே.என்.செல்வகுமார் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x