Published : 28 Dec 2021 06:44 AM
Last Updated : 28 Dec 2021 06:44 AM

திருவொற்றியூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 28 வீடுகள் திடீரென இடிந்து விழுந்தன: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்

சென்னை: திருவொற்றியூரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (குடிசை மாற்று வாரியம்) சார்பில் கட்டப்பட்டிருந்த பழமையான குடியிருப்பில் 28 வீடுகள் திடீரென இடிந்து விழுந்தன. அங்கு வசித்தவர்கள் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டதால் அதிஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை அடுத்த திருவொற்றியூர் கிராமத் தெருவில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கடந்த 1993-ம் ஆண்டு 360 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி தொடங்கியது. செம்மொழி பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் குடிசைகளில் வசித்து வந்தவர்களுக்கு இந்த குடியிருப்பில் 1998-ம் ஆண்டு வாக்கில் வீடுகள் ஒதுக்கப்பட்டன.

அக்குடியிருப்பில் 20 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் வசித்து வந்த நிலையில், வளாகத்தின் தெற்கு பகுதியில் உள்ள 28 வீடுகள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தின் சுவர்களில் கடந்த 26-ம் தேதி இரவு விரிசல் விடத் தொடங்கியது. இதுபற்றி தகவல் அறிந்த முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் தனியரசு, அந்த வீடுகளில் வசித்தவர்களை வெளியேற்றி யுள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை 10 மணி அளவில் 28 வீடுகளும் இடிந்து விழுந்தன. வீடுகளில் இருந்த உடமைகள் அனைத்தும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டன. சரியான நேரத்தில் மக்கள் வெளியேற்றப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. கட்டிடம் இடிந்து விழுந்ததைப் பார்த்து மற்ற வீடுகளில் வசிப்பவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வேறு சில குடியிருப்புகளில் ஏற்கெனவே மேற்கூரையில் இருந்து கான்கிரீட் பெயர்ந்து விழுந்து வரும் நிலையில், அனைவரும் தங்கள் உடமைகளுடன் வீடுகளை விட்டு வெளியேறி திறந்த வெளியில் தஞ்சமடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் சென்று ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறிய தாவது:

நீண்ட நாள் பயன்பாடு மற்றும் தட்பவெப்பநிலை காரணமாக வீடுகள் சிதிலமடைந்துள்ளன. இதுபோன்று சென்னையில் 23 ஆயிரம் வீடுகள் உள்ளன. அவை 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு வாழவே தகுதி இல்லாத 23 ஆயிரம் வீடுகள் இருப்பதை கணக்கெடுத்து அவரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த வீடுகளில் இருந்து படிப்படியாக பொதுமக்களை அப்புறப்படுத்தி, 3 ஆண்டுகளில் புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று முதல்வர் உத்தவிட்டிருந்தார்.

திருவொற்றியூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை திருமண மண்டபத்தில் தங்கவைத்துள்ளோம். புதிதாக கட்டப்பட்ட குடியிருப்புகளில் காலியாக உள்ள வீடுகள் இவர்களுக்கு ஒதுக்கப்படும். இடிந்த குடியிருப்பை ஒட்டியுள்ள மற்ற குடியிருப்புகளின் உறுதித் தன்மையை ஆராய தொழில்நுட்ப வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆய்வு செய்து, கட்டிடம் உறுதி இல்லை என தெரிவித்தால் அதையும் இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அங்கு வசிப்போருக்கும் மாற்று வீடுகள் வழங்கப்படும்.

சென்னையில் முதல்கட்டமாக 7 ஆயிரம் குடும்பங்களுக்கு மாற்று வீடுகள் வழங்க கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் சிதிலமடைந்த வீடுகளை சீரமைக்க ரூ.1 கோடியே 27 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழு வதும் புனரமைப்பு பணிகளுக்காக மட்டும் ரூ.125 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வீடுகளை புதிதாக கட்டும் பணிகளும், சிதிலமடைந்த வீடுகளில் உள்ளவர்களை வெளியேற்றும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அடுத்த 5 ஆண்டுகளில் சிதிலமடைந்த வீடுகளே இல்லாத நிலை தமிழகத்தில் உருவாகும். இடிந்த வீடுகளில் வசித்தவர்கள் தங் கள் சான்றுகளை இழந்திருந்தால், அவர் களுக்கு புதிதாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

ரூ.1 லட்சம் நிவாரணம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘திருவொற்றியூரில் 28 வீடுகள் முழுவதுமாக சேதமடைந்து, அதனால் மக்கள் பாதிப்படைந்த செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். பாதிக்கப்பட்ட மக்கள், அதிலிருந்து மீண்டு புதிய வாழ்க்கையைத் தொடங்க 24 குடும்பங்களுக்கும் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கவும் அவர்களுக்கு மாற்று வீடுகள் வழங்கவும் உத்தரவிட்டுள் ளேன்’ என தெரிவித்துள்ளார்.

முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து நேற்று மாலையே அமைச்சர் தா.மோ.அன்பரசன், பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து தலா ரூ.1 லட்சம் நிவாரணத்தை வழங்கினார்.

வீடுகள் இடிந்த பகுதியில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநர் ம.கோவிந்த ராவ், மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், வட சென்னை எம்பி கலாநிதி வீராசாமி ஆகியோரும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தனர். முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரும் இடிந்த வீடுகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x