Published : 28 Dec 2021 08:54 AM
Last Updated : 28 Dec 2021 08:54 AM

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 2022-ம் ஆண்டில் டிஎன்பிஎஸ்சி மூலமாக 12,263 பணியிடங்களுக்கு ஆள் தேர்வு: குரூப்-2, குரூப்-4 பதவிகளில் மட்டும் 11,086 காலி இடங்கள்

சென்னை: தமிழக அரசின் பல்வேறு துறைகளில் டிஎன்பிஎஸ்சி மூலம் 2022-ம் ஆண்டு 12,263 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் குரூப்-2,குரூப்-2ஏ, குரூப்-4 பதவிகளில் மட்டும் 11,086 காலி இடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் பணியாளர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்காக டிஎன்பிஎஸ்சி அவ்வப்போது போட்டித் தேர்வுகளை நடத்தி, தகுதியான நபர்களை தேர்வு செய்துஅரசு துறைகளுக்கு வழங்குகிறது.

ஓராண்டில் எந்தெந்த அரசு பணிகளுக்கான தேர்வு அறிவிக்கை எப்போது வெளியிடப்படும், எப்போது தேர்வு நடக்கும், தேர்வு முடிவுகள், நேர்காணல் எப்போது நடைபெறும் என்ற விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வுக் கால அட்டவணையை (Annual Planner) டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

அரசு பணியில் சேர விரும்பும் இளைஞர்கள் போட்டித் தேர்வுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு படிப்பதற்கு தேர்வுக் கால அட்டவணை பெரிதும் உதவுகிறது. தற்போதுதமிழக முதல்வரின் செயலராகபணிபுரியும் த.உதயசந்திரன், டிஎன்பிஎஸ்சி செயலராக இருந்தபோது, இந்த நடைமுறையை அறிமுகப்படுத்தினார்.

இந்நிலையில், 2022-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக் கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி சமீபத்தில் வெளியிட்டது. அதில் 32 போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றன. குறிப்பிட்ட சில தேர்வுகளுக்கான அறிவிப்புகளில் மட்டும் உத்தேசகாலியிடங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. தற்போது ஒவ்வொரு தேர்வு மூலமாக உத்தேசமாக எத்தனை காலி இடங்கள் நிரப்பப்படும் என்ற விவரங்களுடன் திருத்தப்பட்ட புதிய தேர்வுக் கால அட்டவணை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, 2022-ம் ஆண்டு அரசின் பல்வேறு துறைகளில் 12,263 காலி இடங்கள் நிரப்பப்படுகின்றன. இதில் குரூப்-2, குரூப்-4பதவிகளில் மட்டும் 11,086 காலிஇடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. குரூப்-2, குரூப்-2ஏ தேர்வு மூலமாக 5,831 இடங்களும், குரூப்-4தேர்வு மூலமாக 5,255 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. குரூப்-2 தேர்வை பட்டதாரிகளும், குரூப்-4 தேர்வை 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் எழுதலாம்.

மேலும், சிவில் நீதிபதி தேர்வு மூலம் 245 காலி இடங்களும், குரூப்-1தேர்வு மூலம் 49 காலி இடங்களும், ஒருங்கிணைந்த பொறியியல் பணி தேர்வு மூலம் 167 காலி இடங்களும் நிரப்பப்படுகின்றன. இந்துசமய அறநிலையத் துறையில் செயல் அலுவலர் பதவியில் (கிரேடு-1, 3, 4) மொத்தம் 65 காலி இடங்கள் உள்ளன.

அதிக எண்ணிக்கையிலான தேர்வர்கள் பங்கேற்கும் குரூப்-2தேர்வுக்கான அறிவிப்பு பிப்ரவரியிலும், குரூப்-4 தேர்வுக்கான அறிவிக்கை மார்ச்சிலும் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

அனைத்து தேர்வுகளுக்கான புதிய பாடத் திட்டம், தேர்வு திட்டம், அனைவருக்கும் பொதுவான கட்டாய தமிழ் மொழித் தாள் தேர்வு பாடத் திட்டம், தேர்வு திட்டம் ஆகியவற்றை தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) அறிந்துகொள்ளலாம்.

பொதுவாக, ஒரு தேர்வுக்கான அறிவிப்பு வெளியிட்டு, தேர்வு நடத்தி இறுதி முடிவுகள் வெளியிட டிஎன்பிஎஸ்சி 2 ஆண்டுகளுக்கு மேல் எடுத்துக்கொள்வதாக போட்டித் தேர்வுக்கு தயாராகி வருவோர் குற்றம்சாட்டுகின்றனர்.

மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) போல டிஎன்பிஎஸ்சியும் காலக்கெடு நிர்ணயித்து தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட வேண்டும் என்பதே தேர்வர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x