Published : 28 Dec 2021 08:46 AM
Last Updated : 28 Dec 2021 08:46 AM

திராவிட - பொதுவுடைமை இயக்கம் இணைந்து செயல்பட வேண்டும்: தா.பாண்டியன் படத்திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் உருவப் படத்தை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு, சென்னை பெரியார் திடலில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் திறந்து வைத்தார். அருகில் கி.வீரமணி, டி.ராஜா, கே.எஸ்.அழகிரி, வைகோ, கே.பாலகிருஷ்ணன், திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்டோர்.

சென்னை: திராவிட இயக்கமும், பொதுவுடைமை இயக்கமும் எப்போதும் இணைந்து செயல்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நேற்று நடைபெற்ற நிகழ்வில், மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் உருவப் படத்தை முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு திறந்து வைத்தார். முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் தா.பாண்டியன் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வுக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற தலைவர்கள் பேசியதாவது:

முதல்வர் ஸ்டாலின்: எந்த சூழ்நிலையிலும், யாருக்கும் அஞ்சாதவர் தா.பாண்டியன். திமுகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கொள்கை குடும்பத்தின் அங்கங்கள். தா.பாண்டியன் கடைசியாக பேசிய மதுரை கம்யூனிஸ்ட் மாநாட்டில் நானும் கலந்து கொண்டேன். அவர் விரும்பியபடி திமுக கூட்டணி பெற்ற வெற்றியை காணாமலேயே சென்றுவிட்டார். திராவிட இயக்கமும், பொதுவுடைமை இயக்கமும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் விரும்பினார். அதன்படி நாம் எப்போதும் இணைந்து செயல்பட வேண்டும். கம்யூனிஸ்ட்கள் விரும்பும் பொன்னுலகை படைக்கவே விரும்புகிறோம். அந்த இலக்கை நோக்கி நாம் செயல்படுவதே தா.பாண்டியனுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி.

இரா.நல்லகண்ணு: இளம் வயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர் தா.பாண்டியன். எழுத்தாளர், பேச்சாளர், தமிழ், ஆங்கிலப் புலமை, கட்சிப் பணி, போராட்டக் குணம் என்று பன்முகத்தன்மை கொண்டவர். மதவாத பாஜகவை எதிர்ப்பதில் இறுதி வரை உறுதியாக நின்றவர்.

இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா: ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக புரட்சிகர போராட்டங்களை முன்னெடுத்தவர். சமத்துவம், சமூக நீதிக்காக உறுதியுடன் குரல் கொடுத்தவர். இந்தியா மதச்சார்பற்ற நாடாக தொடர, ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் உள்ள பாஜக அரசை வீழ்த்தநாம் ஒன்றுபட்டு போராட வேண்டும். அதுதான் தா.பாண்டியனுக்கு நாம் செலுத்தும் மரியாதை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: கடைசி மூச்சு இருக்கும் வரை ஒரு கம்யூனிஸ்ட் சிந்தனையாளராகவே வாழ்ந்து மறைந்தவர். தனது கடைசி உரையில், ‘‘இந்த மண்ணில் மதவாத சக்திகளை வளர விட்டுவிடாதீர்கள்’’ என்று வேண்டுகோள் விடுத்தவர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: ஜீவாவால் வளர்த்தெடுக்கப்பட்ட தா.பாண்டியன், கடைசி வரை பொதுவுடைமை போராளியாக வாழ்ந்தவர். தனதுகடைசி உரையில், சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெல்லும்என்று சரியாக கணித்தவர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: லட்சியத்துக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் தா.பாண்டியன். தனது கருத்தை ஆணித்தரமாக, பிறரை கவர்ந்திழுக்கும் வகையில் பேசும்ஆற்றல் கொண்டவர். தேசியம், தமிழ் மொழி பற்று கொண்டவர்.

திராவிடர் கழகத் தலைவர்கி.வீரமணி: பொது வாழ்வில்இருப்பவர்களுக்கு தா.பாண்டியன் வாழ்க்கை ஒரு பாடம். யாருக்காகவும் தனது கருத்தை ஒருபோதும் மாற்றிக் கொள்ளாதவர். பெரியாரை மிகச்சரியாக உள்வாங்கிக் கொண்டவர். மதவாதத்தை வீழ்த்தி ஜனநாயகத்தை காக்க தா.பாண்டியன் வழியில்செயல்படுவோம். தமிழகம் போல அனைத்து மாநிலங்களிலும் மதவாதத்தை வீழ்த்த கூட்டணி அமைய வேண்டும்.

விசிக தலைவர் திருமாவளவன்: மொழி, இனம் சார்ந்த களத்தில் தீவிரமாக ஈடுபட்ட கம்யூனிஸ்ட்தலைவர் தா.பாண்டியன். கடைசிவரை மதவாத சங்பரிவார் இயக்கத்தை எதிர்த்த தா.பாண்டியன் வழியில் செயல்படுவோம்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் மொகிதீன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, தவாக தலைவர் வேல்முருகன், அமைச்சர் சேகர்பாபு, இந்திய கம்யூனிஸ்ட் புதுச்சேரி மாநிலச் செயலாளர் ஏ.எம்.சலீம், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், காங்கிரஸ் ஊடகப் பிரிவு மாநிலத் தலைவர் கோபண்ணா மற்றும் தா.பாண்டியன் குடும்பத்தினரும் இதில் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x