

இப்போது நடப்பது கவுரவக் கொலையல்ல. சாதியின் பெயரால் நடக்கும் ஆணவக் கொலை என தமிழ்நாடு பார்கவுன்சிலில் நடந்த விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.ஹரிபரந்தாமன் பேசினார்.
இந்திய வழக்கறிஞர் சங்கம் மற்றும் என்.டி.வானமாமலை அறக்கட்டளை சார்பில் சட்ட கருத்தரங்கம் மற்றும் மகளிர் தினவிழா சென்னை பார் கவுன்சிலில் நடந்தது. இவ்விழாவில் பங்கேற்று உயர் நீதிமன்ற நீதிபதி டி.ஹரிபரந்தாமன் பேசியதாவது:
சென்னையி்ல் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்பின்போது எல்லோரும் சாதி வேறுபாடுகளை மறந்து ஒருதாய் வயிற்றில் பிறந்தவர்களைப் போல ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டனர். பார்ப்பதற்கே பிரமிப்பாக இருந்தது. ஆனால் இப்போது 2 மாதத்தில் மீண்டும் சாதீயத் தீ நம்மை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. இப்போது சாதிக்காக கொலைகள் அதிகரித்து வருகின்றன. இது கவுரவக் கொலை அல்ல. சாதி என்ற ஆணவத்தால் நடக்கும் ஆணவக் கொலை. இதைக் கண்டிப்பாக தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரிய தலைவர் நீதிபதி கே.என்.பாஷா, பார் கவுன்சில் தலைவர் டி.செல்வம், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ், பெண் வழக்கறிஞர் சங்கத் தலைவர் நளினி, வழக்கறிஞர் அஜிதா உள்பட பலர் பங்கேற்றுப் பேசினர். விழாவில் ஏழைப் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வழக்கறிஞர் எஸ்.ஜேம்ஸ் ஜெகநாதன் நன்றி கூறினார்.