Published : 01 Mar 2016 06:43 PM
Last Updated : 01 Mar 2016 06:43 PM

தமிழக அரசியலில் உருவெடுக்கும் புதிய வாரிசுகள்!

அரசியல் கட்சிகளில் வாரிசு அரசியல் தவிர்க்க முடியாததாகிவிட்டது. ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, ராகுல் காந்தி, கார்த்தி சிதம்பரம், வாசன், அன்புமணி, பிரேமலதா, சுதிஷ் ஆகிய அரசியல் வாரிசுகள் நேரடி அரசியலில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்களைத் தாண்டி அடுத்த தலைமுறை வாரிசுகளும் தேர்தல் களத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை செய்கிறார்கள்.

அதிமுக:

போயஸ் கார்டனில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறார் 25 வயதேயான விவேக் ஜெயராமன். இளவரசியின் மகனான இவர் பெங்களூர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். சுமார் ஓர் ஆண்டுக்கு முன்புவரை கட்சியின் முக்கியப் பிரமுகர்களுக்குக்கூட இவரை தெரியாது. ஜெயலலிதா பெங்களூர் சிறையில் இருந்தபோது அவருக்கு தேவையான மருந்து, மாத்திரைகளுடன் சென்று சந்தித்தார். அதன் பின்பு அவரது வாழ்க்கையே மாறிப்போனது.

இப்போது விவேக் ஜெயராமன் 'ஜாய்ஸ் சினிமா'-வின் சி.இ.ஓ. இதுகுறித்து அவருக்கு நெருக்கமான நண்பர்கள் சிலர், "நிதி மற்றும் வியாபார விஷயங்களில் விவேக் சில புத்திசாலித்தனமான ஆலோசனைகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்தே அரசியல் நிலவரங்கள் குறித்தும் அவரிடம் மேலிடம் ஆலோசிப்பதாக தெரிகிறது. குறிப்பாக தேர்தல் செலவுக்காக நிதி நிர்வாகம் இவரது தலைமையின் நடைபெறலாம்" என்கின்றனர்.

இடது: ஜெயானந்த் | வலது: விவேக் ஜெயராமன்

இன்னொரு பக்கம் சமூக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகிறார் திவாகரனின் மகன் ஜெயானந்த். சென்னை லயோலா கல்லூரியில் படிக்கும் ஜெயானந்த் கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே சமூக பணிகளில் ஆர்வம் காட்டுகிறார். ஆனால், நெருங்கிய நண்பர்கள் ஓரிருவரை தவிர ஜெயானந்த்தை யார் என்பது தெரியாது.

இதுகுறித்து ஜெயானந்துக்கு நெருக்கமான சிலர் கூறுகையில், "வெப்சைட் ஒன்றை தொடங்கி அதில் வெளிநாடு வாழும் தமிழர்களுக்கான தேவைகளை அறிந்து வேலை வாய்ப்பு உதவி செய்துவருகிறார் ஜெயானந்த். மழை வெள்ளத்தின்போது காஞ்சிபுரம் மாவட்டம் பட்டிபுலம், இடையூர் குப்பம் மற்றும் கடலூர் கிராமங்களுக்கு நேரில் சென்று 10 டன் அரிசி, மீன்பிடி வலைகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். கே.கே.நகரில் மருத்துவ முகாம் நடத்தினார். இவர் யார் என்று காட்டிக் கொள்ளாமல் பழகுவதால் அதிமுக கட்சியின் உண்மையான நிலவரங்களை இவர் அறிந்துக்கொள்ள முடிகிறது. அவற்றை தனது அத்தையான சசிகலாவிடம் தினசரி பகிர்ந்துக்கொள்கிறார்" என்கிறார்கள்.

இளவரசியிடன் மூத்த மகளான கிருஷ்ண ப்ரியாவுக்கு அரசியல் ஆசை இல்லை எனினும் 'கிருஷ்ண ப்ரியா ஃபவுண்டேஷன்' என்கிற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். மாதம்தோறும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு உதவுவது, ஆதரவற்ற குழந்தைகள், தசைத்திறன் குறைபாடுள்ள குழந்தைகள் ஆகியோருக்கு வெளியே தெரியாமல் உதவி வருகிறார். சென்னை கிரீம்ஸ் சாலையிலிருக்கும் தசைத் திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியை நிர்வகிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறார். எதிர்காலத்தில் இவரை கட்சியின் முக்கிய இடத்தில் அமர வைத்துவிட வேண்டும் என்பது இளவரசியின் ஆசை.

திமுக:

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பொது நிகழ்ச்சிகளில் தீவிர ஆர்வம் காட்டினார் உதயநிதி ஸ்டாலின். பல்வேறு ஊர்களுக்கு சென்று ரசிகர்களுடன் கட்சியின் இளைஞர் அணி நிர்வாகிகளையும் சந்தித்தார். சில கட்சி நிர்வாகிகளின் திருமணங்களிலும் கலந்துகொண்டார். ஸ்டாலினுக்கு அடுத்த அரசியல் வாரிசு இவர் தான் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால், திடீரென்று இவர் நேரடி அரசியலை தவிர்த்துவிட்டார்.

இதுகுறித்து உதயநிதியின் ஆதரவாளர்கள் கூறுகையில், "அரசியல் அவருக்குரிய காலம் கனியவில்லை என்று குடும்பத்திலுள்ள மூத்தவர் ஒருவர் அறிவுரை சொன்னதுதான் இதற்குக் காரணம். ஆனாலும் தனது மைத்துனர் சபரீசன், தனது ரசிகர் மன்ற மாநில தலைவர் மற்றும் கட்சியின் மாநில இளைஞரணி துணை அமைப்பாளருமான அன்பில் மகேஷ் ஆகியோர் மூலம் வரும் சட்டசபை தேர்தல் தொடர்பான முக்கிய ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அரசியலிலிருந்து முற்றிலுமாக தான் விலகிவிடவில்லை என்பதை உணர்த்தவே தனது டிவிட்டர் பக்கத்தில் ஜெயலலிதாவை கிண்டலடித்து கவிதையை வெளியிட்டிருக்கிறார்" என்றார்கள்.

இடது: உதயநிதி ஸ்டாலின் | வலது: சபரீசன்

இதற்கிடையே உதயநிதியையும் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட வைக்க சிலர் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் நேரடியாக இதுகுறித்து உதயநிதியிடம் கேட்டிருக்கின்றனர். ஆனால், அவரோ இதுவரை பிடிகொடுக்கவில்லை. கடைசி சில நாட்களில் எதுவும் நடக்கலாம் என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

திருமணமான தொடக்கத்தில் கட்சி அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த சபரீசன் (ஸ்டாலின் மருமகன்), பின்பு படிப்படியாக கட்சியினருடன் பழகினார். குறிப்பாக தன் மீது யாருக்கும் தன் மீது கோஷ்டி முத்திரை, அதிருப்தி வராமல் பார்த்துக்கொண்டார். இன்று சபரீசன் பெயரை இன்று திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சியினர் ஒருசேர உச்சரிக்கிறார்கள்.

காரணம், அவரது புத்திசாலித்தனம் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் திறமை. ஸ்டாலினின் முகநூல், டிவிட்டர் தொடங்கி சமூக வலைத்தளங்கள், 'நமக்கு நாமே' திட்டம் ஆகியவற்றை உருவாக்கியது இவர்தான். ஸ்டாலின் தினம் என்ன உடை அணிய வேண்டும்? இன்றைக்கு எதைப் பற்றி பேச வேண்டும் என்பது உட்பட சபரீசன் தலைமையிலான குழுதான் பரிந்துரைக்கிறது. அதிமுக-வை விமர்சித்து தற்போது வெளியாகிக்கொண்டிருக்கும் விதவிதமான விளம்பர யுக்திகளும் இவரது குழுவின் யுக்தியே.

மதிமுக:

வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு அரசியலில் ஆர்வம் இருந்தாலும் விமர்சனத்துக்கு ஆளாகக் கூடாது என்று தள்ளியே வைத்திருக்கிறார் வைகோ. ஆனால், ஏற்கெனவே இருமுறை துரை வையாபுரிக்கு நேரடி அரசியல் களங்கள் அமைந்தன. 2006-ல் மதிமுக-வில் செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்ட சிலர் பிரிந்தபோது துரை வையாபுரி அப்போதுதான் கட்சிக்குள் தலைகாட்ட ஆரம்பித்திருந்தார்.

துரை வையாபுரி

அப்போது செஞ்சி ராமச்சந்திரன், "வைகோவை பின்னாலிருந்து இயக்குவது அவரது மகன்தான்" என்று குற்றம்சாட்டினார். இதனால் மனம் நொந்த வைகோ கட்சிப் பக்கம் தலைகாட்ட வேண்டாம் என்று மகனுக்கு உத்தரவிட்டார். நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் வைகோவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார் துரை வையாபுரி.

சிவகாசியில் நடந்த இரு சக்கர வாகன பேரணிக்கு தலைமை தாங்கினார். ஆனால், அந்த தேர்தலுக்கு பின்பு வைகோ "என் மகனுக்கு அரசியலுக்கு வரும் எண்ணமில்லை" என்றார். அதேசமயம், தற்போது நேரடியாக களத்தில் இறங்காவிட்டாலும் கூட்டணி பேச்சுவார்த்தை, சீட்டு பேரம் உள்ளிட்ட பல விஷயங்களில் துரை வையாபுரி தனது தந்தைக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கி வருவதாக சொல்கிறார்கள் கட்சியின் நிர்வாகிகள். இப்போது இல்லை என்றாலும் எதிர்காலத்தில் மதிமுக-வை வழிநடத்தப்போவது துரை வையாபுரி என்பதுதான் கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் கணிப்பாக இருக்கிறது.

தேமுதிக:

விஜயகாந்த் தனது மூத்த மகனுக்கு துணை முதல்வர் பதவி கேட்டு கூட்டணி நிபந்தனை விதித்ததாக சமீபத்தில் பேச்சு எழுந்தது.

விஜயகாந்த் மகன்கள் சண்முக பாண்டியன், விஜய பிரபாகரன்

இதுகுறித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள், "இது முற்றிலுமாக பொய் தகவல். எங்கள் தலைவர் அப்படி ஒரு கோரிக்கையை எங்கும் வைக்கவில்லை. ஆனால், எதிர்காலத்தில் மூத்த மகனை அரசியலுக்கு கொண்டு வரும் ஆசை பிரேமலதாவுக்கு இருக்கிறது." என்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x