Published : 28 Dec 2021 09:04 AM
Last Updated : 28 Dec 2021 09:04 AM

பொன்னேரியில் பெரியார் சிலை சேதம்: பல்வேறு கட்சிகள் சாலை மறியல்; ஒருவர் சரண்

பொன்னேரி: பொன்னேரியில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதால் திமுக, விசிக உள்ளிட்ட அரசியல் கட்சிகள், திக உள்ளிட்ட பல்வேறுஅமைப்புகளைச் சேர்ந்தோர், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக ஒருவர்காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி புதிய பஸ் நிலையத்தில் பெரியார் ஈ.வெ.ரா. சிலை உள்ளது. இந்த சிலையின் முகப்பகுதி நேற்றுமுன்தினம் இரவு சேதமாகியுள்ளது.

இதுகுறித்து, தகவலறிந்த கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான டி.ஜெ.கோவிந்தராசன் உள்ளிட்ட திமுகவினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினர், திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தோர் என, 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை சம்பவ இடம் விரைந்து, ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அங்கு விரைந்தபொன்னேரி போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டோரை சமாதானப்படுத்தி, அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர். பிறகு, சேதப்படுத்தப்பட்ட சிலையை துணியால்மூடினர். சிலை சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே பொன்னேரி பகுதியை சேர்ந்த செல்லக்கிளி(30) என்பவர், இரும்புக் கம்பியால் பெரியார் சிலையை தான் சேதப்படுத்தியதாக கூறி, பொன்னேரி காவல் நிலையத்தில் நேற்று சரணடைந்தார்.

செல்லக்கிளியிடம் போலீஸார்நடத்திய முதல்கட்ட விசாரணையில், அவர் மனநோயால் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்துள்ளது. ஆகவே, சிலையை அவர்தான் சேதப்படுத்தினாரா என்பதை உறுதி செய்ய அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக திமுக உள்ளிட்ட அரசியல்கட்சிகளை சேர்ந்தோர், ஊர்வலமாக பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் சென்று, கோட்டாட்சியர் செல்வத்திடம் புகார் மனு அளித்தனர். அம்மனு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் உறுதியளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x