

தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சந்திக்க மறுத்ததால் கூட்டணி பேச்சு நடத்துவதற்காக நேற்று சென்னை வந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஏமாற்றத்துடன் டெல்லி திரும்பினார்.
ஓரிரு நாளில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் தேமுதிக, பாமகவை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவ டேகர், கடந்த 28-ம் தேதி சென்னையில் விஜயகாந்த், அன்புமணி ஆகியோரை சந்தித்துப் பேசினார். அப்போது செய்தி யாளர்களிடம் பேசிய ஜவடேகர், ‘‘விஜய காந்த் உடனான சந்திப்பு மகிழ்ச்சிகரமாக இருந்தது. மத்திய பட்ஜெட் தாக்கலான பிறகு மீண்டும் அவரை சந்தித்துப் பேசு வேன்’’ என தெரிவித்திருந்தார். ஆனால், தேமுதிக தரப்பிலோ, ‘இது மரியாதை நிமித்தமான சந்திப்பு’ என தெரிவிக்கப் பட்டது. இந்நிலையில், நேற்று காலை 10.30 மணிக்கு திடீரென சென்னை வந்த ஜவடேகர், ஹோட்டலில் இருந்தபடி விஜய காந்த், பிரேமலதா மற்றும் அன்புமணி ஆகியோரை தொடர்பு கொண்டு சந்திக்க வருவதாக தெரிவித்துள்ளார். ஆனால், மூவரும் சந்திக்க மறுத்துவிட்டதாகவும், எங்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் என உறுதியுடன் தெரிவித்த தாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.
இந்நிலையில், பிற்பகல் 2.30 மணிக்கு கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத் தில் உள்ள தேசிய நீடித்த வளர்ச்சிக்கான கடலோர மேலாண்மை மையத்துக்கு ஜவடேகர் சென்றார். இது மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் இங்கும் அமைப்பாகும். சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு வெளியே வந்த ஜவடேகரிடம், சென்னை வருகையின் நோக்கம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், ‘‘கூட்டணி பேச்சு நடத்துவதற்காக வரவில்லை. விஜயகாந்த், அன்புமணி உட்பட யாரையும் சந்திக்கவும் முயற்சிக்கவில்லை. அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் சுற்றுச் சூழல் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற் கவே வந்துள்ளேன். கூட்டணி பேச்சு நடத்து வதற்காக அடுத்த வாரம் வருவேன்’’ என்றார். ஆனால், அமைச்சர் கூறியதுபோல கடலோர மேலாண்மை மையத்தில் கருத்தரங்கு எதுவும் நேற்று நடக்கவில்லை. அமைச்சரின் வருகை குறித்த தகவல் துணைவேந்தருக்கோ, பதிவாளருக்கோ முன்கூட்டியே தெரியவில்லை.
இதுகுறித்து பாஜக வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘‘கூட்டணி குறித்து எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் பாஜக தலைவர் அமித்ஷா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதனால் அவசரமாக சென்னை வந்த ஜவடேகரால் விஜயகாந்த், அன்புமணியை சந்திக்க முடியவில்லை. எனவே, அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள கடலோர மேலாண்மை மைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்’’ என்றனர்.
தனது பயணம் தோல்வியில் முடிந்ததால் நேற்று மாலை 5 மணிக்கு ஜவடேகர் ஏமாற்றத்துடன் டெல்லி திரும்பினார். விஜய காந்தும், அன்புமணியும் மத்திய அமைச் சரை சந்திக்க மறுத்திருப்பது தமிழக பாஜக தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனால், பாஜக தலை மையில் வலுவான கூட்டணி அமைக்கும் முயற்சியில் சிக்கல் எழுந்துள்ளது.
அவசரமாக வந்த தமிழிசை
பிரகாஷ் ஜவடேகர் சென்னை வருகை குறித்து பாஜக நிர்வாகிகள் யாருக்கும் எந்த தகவலும் வரவில்லை. அதனால், அவரை வரவேற்க விமான நிலையத்துக்கு யாரும் வரவில்லை. இந்த நேரத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன், திருப்பதியில் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தார். ஜவடேகர் வந்துள்ள தகவலை ஊடகங்கள் மூலம் அறிந்த தமிழிசை, அவசரமாக சென்னை திரும்பினார். பின்னர் அவரும், மோகன்ராஜூலுவும் ஜவடேகரை அவர் தங்கியிருந்த ஹோட்டலில் சந்தித்தனர். மாநிலத் தலைவருக்குக்கூட தகவல் தெரிவிக்காமல் ஜவடேகர் திடீரென சென்னை வந்தது தமிழக பாஜக தலைவர்களை திகைப்படையச் செய்துள்ளது.