

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக அதிகரிக்கப்படும் என்று தேமுதிகவின் 2-ம் கட்ட தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப் பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் கடந்த மாதம் நடந்த தேமுதிக மாநில மாநாட்டில், அக்கட்சியின் முதல்கட்ட தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்நிலையில், தேமுதிகவின் 2-ம் கட்ட தேர்தல் அறிக்கையை கோயம் பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் நேற்று வெளியிட்டார். இது குறுந்தகடு வடிவில் வெளியிடப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58-ல் இருந்து 60 ஆக உயர்த்துவது, மாற்றுத் திறனாளிகளுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்குவது, பொங்கலை ஒரு வாரம் கொண்டாட ஏற்பாடு, பேரிடரை கண்டறியும் வசதி களை ஏற்படுத்துவது, மணல் கொள்ளையைத் தடுக்க தனி அமைப்பு, சீமைக்கருவேல மரங்கள் ஒழிப்பு, அரசுத்துறைகளை கணினி மயமாக்குவது, அர்ச்சகர்களுக்கு மாத ஊதியம், தனியாருடன் இணைந்து கப்பல் போக்குவரத்து தொடங்குவது போன்ற அம்சங்கள் தேர்தல் அறிக் கையில் இடம்பெற்றுள்ளதாக தேமுதிக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
‘‘மக்களின் கருத்துகளை கேட்ட றிந்து, அதன்படி தேமுதிகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. தேமுதிக ஆட்சிக்கு வந்தால், இந்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். கடந்த 60 ஆண்டு திமுக, அதிமுக ஆட்சியில் மக்களின் வாழ்வாதாரம் உயரவில்லை. அதிமுக அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை’’ என்று தனது கட்சி டி.வி.க்கு அளித்த பேட்டியில் விஜயகாந்த் கூறியுள்ளார்.
மக்களின் கருத்துகளை கேட்டறிந்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப் பட்டுள்ளது. தேமுதிக ஆட்சிக்கு வந்தால், வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.