Published : 27 Dec 2021 08:56 AM
Last Updated : 27 Dec 2021 08:56 AM

கே.டி.ராஜேந்திரபாலாஜி யார் யாரிடம் எவ்வளவு பணம் வாங்கினார்? - பட்டியல் வெளியிட்டது விருதுநகர் மாவட்ட காவல் துறை

விருதுநகர்: பால்வளத் துறை முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மாவட்ட அதிமுக மேற்கு மாவட்டச் செயலருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆவின் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பலரிடம் ரூ.3 கோடி வரை பெற்று மோசடி செய்ததாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் 2 வழக்குகள் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை 8 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். இந்நிலையில், கே.டி.ராஜேந்திரபாலாஜி யார் யாரிடம் எவ்வளவு பணம் வாங்கினார் என்கிற விவரத்தை பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், விருதுநகர் மாவட்டக் காவல் துறை வெளியிட்டுள்ளது.

சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் ரூ.30 லட்சம், இரா.முருகன், க.முருகன், இளங்கோ, பரமசிவம் ஆகியோர் ரூ.1.60 கோடி, ஹரிபாலு ரூ.5.20 லட்சம், கார்த்திக்குமார் ரூ.16 லட்சம், மதுரை கோமதிபுரம் 5-வது தெருவைசேர்ந்த செல்வராஜ் ரூ.16 லட்சம், திருவில்லிபுத்தூர் பாப்பா அங்குராஜ் நகரில் வசிக்கும் வெங்கடாசலம் ரூ.10 லட்சம், சிவகாசி சித்துராஜபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த குணா தூயமணி ரூ.17 லட்சம், மதுரை வில்லாபுரம் காமராஜர் நகர் 3-வது தெருவைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம் ரூ.7 லட்சம், நெய்வேலி அலங்கரைச்சாமி மகன் ஜோசப்ராஜ் என்பவர் ரூ.7.50 லட்சம் தந்துள்ளனர். இவற்றை சாத்தூர் அதிமுக ஒன்றியச் செயலாளர் விஜய நல்லதம்பி உள்ளிட்ட கட்சி பிரமுகர்களிடமும், ராஜேந்திர பாலாஜியிடமும் நேரடியாக தந்துள்ளனர் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

மேலும், இதுதொடர்பாக தனித்தனியாக புகார்கள் பெறப்பட்டுஉள்ளன. அதன்படி, ராஜேந்திரபாலாஜி மேலும் ரூ.73.66 லட்சம் மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப் பிரிவில் 7 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x