Published : 27 Dec 2021 01:32 PM
Last Updated : 27 Dec 2021 01:32 PM

ஒமைக்ரான் தொற்று பரவலைக் காரணம் காட்டி இந்து பண்டிகைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது: அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்

திருப்பூர்: ஒமைக்ரான் தொற்று பரவலைக்காரணம் காட்டி இந்து பண்டிகைகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடாது என்று, இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்து மக்கள் கட்சி அமைப்பின் திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட அலுவலகம் ராயபுரத்தில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்து மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் அர்ஜூன் சம்பத் திறந்து வைத்து, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தை மாதம் முதல் தேதி பொங்கல் பண்டிகை வருவதை முன்னிட்டு அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.5 ஆயிரம் பொங்கல் பரிசாக தமிழக அரசு வழங்க வேண்டும். திமுக ஆட்சியில் தை முதல் தேதி தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்தார்கள்.

மீண்டும் அதிமுக சித்திரை மாதம் முதல் தேதியை அறிவித்தது.தற்போது மீண்டும் திமுக தை முதல் தேதி என மாற்ற முயற்சிக்கிறது. நமது பாரம்பரியப்படி சித்திரை மாதம் முதல் தேதிதான் புத்தாண்டு.

ஒமைக்ரான் தொற்று பரவலைகாரணம் காட்டி, இந்து பண்டிகை கொண்டாட்டங்கள், வழிபாடுகளுக்கு தடை அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது. திமுக தலைவராக இந்து பண்டிகைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூற தேவையில்லை. மாநில முதல்வராக நிச்சயமாக இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூற வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடியின் வருகை தமிழகத்துக்கு பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டு வருகிறது. அவரின் வருகையை தமிழக வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கோவை மண்டலத்தில் அதிமுக செல்வாக்கு பெற்றுள்ளதால், உள்ளாட்சி தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில், சில கல்வி நிறுவனத்தினர் உள்ளிட்டோருடன் கூட்டணி வைத்து அமைச்சர் செந்தில்பாலாஜியை திமுக களமிறக்கியுள்ளது. திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி இடையிலான விவகாரத்தில், நாம் தமிழர் கட்சிக்குஉறுதுணையாக இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x