மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை செயல்படத் தொடங்கியது

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை செயல்படத் தொடங்கியது
Updated on
1 min read

‘தி இந்து’ செய்தியால் ஒரே நாளில் நடவடிக்கை

*

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒரு மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை ‘தி இந்து’ செய்தியால் ஒரே நாளில் செயல்படத் தொடங்கியது. இதனால், தென் தமிழக புற்றுநோயாளிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் நோயாளிகள் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுகின்றனர். கதிரியக்க சிகிச்சையைத் தொடங்கும் நோயாளி தொடர்ந்து 28 நாட்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இடையில் நிறுத்தினால், புற்றுநோய் செல்கள் வளர்ந்து நோய் மேலும் தீவிரமடையும்.

கதிரியக்க சிகிச்சைக்குத் தேவையான கோபால்ட் தெரபி மருந்து மதுரை அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் தீர்ந்து விட்டது. இந்த மருந்து, மும்பை பாபா அணு ஆராய்ச்சிக் கழகத்தில் இருந்து கடந்த மாதம் இறுதியிலேயே வரவழைக்கப்பட்டு நிரப்பப்பட்டது. ஆனால், பாபா அணு ஆராய்ச்சிக் கழக ஒப்புதல் கிடைக்காததால், கதிரியக்க சிகிச்சை கடந்த ஒரு மாதமாக செயல் படாமல் இருந்தது. இதனால், தென் மாவட்டங் களில் இருந்து பல நூறு கி.மீ. தொலைவில் இருந்து வந்த புற்று நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதுகுறித்து ‘தி இந்து’ நாளிதழில் கடந்த 29-ம் தேதி செய்தி வெளியானது. இந்த செய்தியை சுட்டிக்காட்டிய பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸும், மதுரையில் நேற்று முன்தினம் மருத்துவமனை நிர்வாகத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.

இதையடுத்து, தமிழ்நாடு மருத்துவத் துறை அதிகாரிகள் பாபா அணு ஆராய்ச்சிக் கழகத்திடம் இ-மெயில் மூலம் ஒரே நாளில் அனுமதி பெற்று, நேற்று முதல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வழக்கம்போல் கதிரியக்க சிகிச்சை செயல்படத் தொடங்கியது. ஒரு மாதமாக முடங்கிக் கிடந்த கதிரியக்க சிகிச்சை ‘தி இந்து’ செய்தி மூலம் ஒரே நாளில் செயல்படத் தொடங்கியதால் புற்றுநோயாளிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

அன்புமணி சொன்னது உண்மையா?

மதுரையில் அன்புமணி ராமதாஸ் கூறும்போது, ‘புற்றுநோய்க்கு வழங்கப்படும் கோபால்ட் கதிரியக்க சிகிச்சை 40 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய சிகிச்சை. தற்போது எவ்வளவோ புதிய சிகிச்சை முறை வந்துள்ளது. பழைய சிகிச்சையைத் தொடருவது கண்டிக்கத்தக்கது’ என்றார்.

இதுகுறித்து புற்றுநோய் கதிரியக்க சிகிச்சைப் பிரிவு நிபுணர்களிடம் கேட்டபோது, ‘கோபால்ட், தற்போது வந்துள்ள லினாக் உள்ளிட்ட எல்லாமே கதிரியக்கம் சம்பந்தப்பட்டதுதான். பெரிய டார்ச் லைட் அடிப்பதற்கும், சிறிய டார்ச் லைட் அடிப்பதற்கும் உள்ள வித்தியாசமே இந்த இரு சிகிச்சைக்குமான வித்தியாசம். மற்றபடி கோபால்ட் கதிரியக்க சிகிச்சை சிறந்த சிகிச்சைதான்’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in