Published : 05 Mar 2016 09:58 AM
Last Updated : 05 Mar 2016 09:58 AM

பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் மகன் வரவால் மதுரை திமுக மா.செ.க்களின் கனவு கலைகிறது?

யாரும் எதிர்பாராமல் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனின் மகன் தியாகராஜன் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருப்பது மதுரை திமுகவில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

மதுரை மாவட்டத்தில் 10 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. திமுகவில் அமைப்பு ரீதியாக மதுரை மாவட்டம் நான்காகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் மதுரை நகரில் உள்ள 4 தொகுதிகளில் மாவட்டச் செயலாளர்கள் வி.வேலுச்சாமி, கோ.தளபதி ஆகியோர் கட்டுப்பாட்டில் தலா 2 தொகுதிகள், புறநகரில் மாவட்டச் செயலாளர்கள் பி.மூர்த்தி, எம்.மணிமாறன் ஆகியோர் கட்டுப்பாட்டில் தலா 3 தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. மாவட்டச் செயலாளர்கள் தாங்கள் போட்டியிடப் பாதுகாப்பான தொகுதியை தேர்ந்தெடுத்துக் கொண்டு, மற்ற இடங்களில் தனது ஆதரவாளர்களை போட்டியிடச் செய்ய திட்டமிட்டிருந்தனர். இதற்கேற்ப கட்சியிலும் விருப்ப மனு அளித்தனர். தங்களுடைய ஆதரவாளர்களுக்கும் நினைத்தபடி தொகுதிகளை பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் இப்போதே பிரச்சார வேலைகளையும் தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில், முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனின் மகன் தியாகராஜனை திமுக தலைமையே அழைத்து மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளிக்கச் செய்தது. முக்கிய பிரமுகருக்கான மரியாதையுடன் நேர்காணலையும் அவர் முடித்து விட்டார். இவரது திடீர் வருகைக்குப் பின் மதுரை திமுகவில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. தாங்கள் நினைத்தது ஒன்று, நடப்பது வேறாக இருக்கிறதே எனக்கருதி மதுரை மாவட்ட செயலாளர்கள் தவிக்கின்றனர்.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

கட்சித் தலைமையிடம் யாருக்கு செல்வாக்கு என்பதிலேயே மதுரை நகர், புறநகர் மாவட்ட செயலாளர்களிடையே ஏற்கெனவே முட்டல், மோதல் இருந்து வருகிறது. தற்போது, தியாகராஜனின் வருகைக்குப்பின் தங்களுக்கு தொகுதி கிடைத்தாலே பெரிய விஷயம் என்ற எண்ணத்துக்கு மாவட்டச் செயலாளர்கள் வந்துவிட்டனர்.

திமுக ஆட்சிக்கு வந்தால் தியாகராஜன் அமைச்சராவது உறுதி என்ற பேச்சும் கிளம்பியிருக்கிறது. இதனால் ஏதோ ஒரு நம்பிக்கையில் இப்போதே ஊர் ஊராகப் போய் பிரசாரம் செய்து கொண்டிருக்கும் புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் பி.மூர்த்தியின் அமைச்சர் கனவும் கேள்விக்குறியாகியுள்ளது.

மதுரை மேயர் பதவியை மதுரை வடக்கு மாவட்டச் செயலர் வேலுச்சாமி குறி வைத்துள்ளதால் சட்டப்பேரவை தேர்தலில் அவர் போட்டியிட மாட்டார் என்கிறார்கள். கூட்டணிக்கு தொகுதிகள் மாறுவது, சாதி வாக்குகளை கணக்கில் வைத்துப் பார்த்தால் மாவட்டச் செயலாளர் கோ.தளபதிக்கும் தொகுதி நிச்சயமில்லாத நிலை உருவாகியுள்ளது.

மதுரை நகரில் உள்ள 4 தொகுதிகளில் 2 கூட்டணிக்கும், ஒன்றில் தியாகராஜனுக்கும் ஒதுக்கப்பட உள்ளதாகச் சொல்கிறார்கள். புறநகரில் உள்ள 6-ல் ஒன்று கூட்டணிக்குப் போகிறது. 2 மாவட்டச் செயலாளர்களுக்கு தலா ஒன்று, உசிலம்பட்டி, மேலூர் தொகுதிகளை மாவட்டச் செயலாளர்களின் ஆதரவாளர்களுக்குப் பெற முயற்சி நடக்கிறது. இதிலும் நிச்சயமற்ற சூழலே உள்ளது. 2 தொகுதிகளில் மட்டுமே வேட்பாளர் யார் என்பது தெரியாத நிலை உள்ளது.

தாங்கள்தான் அமைச்சர், தாங்கள் சுட்டிக்காட்டுபவர்கள்தான் வேட்பாளர்கள் என்ற கனவில் வலம் வந்த மாவட்டச் செயலாளர்களுக்கு தியாகராஜனின் வரவு தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்குப் பிறகும் தியாகராஜனுக்கே செல்வாக்கு இருக்கும் என்பதால், மாவட்டச் செயலாளர்களைச் சுற்றிவந்த முக்கிய நிர்வாகிகள் பலர் தற்போது மாயமாகி விட்டனர்.

மதுரை திமுகவில் தியாகராஜன் இதுவரை எந்த தலையீடும் செய்ததில்லை. அவரது திடீர் வரவு, காலம்காலமாக திமுகவில் இருக்கும் கட்சியினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாளையம் இல்லத்துக்கு மீண்டும் மவுசு!

அமைச்சர் பதவியில் இருந்த பிடிஆர் இறந்ததையடுத்து கடந்த 2006ல் மதுரை மத்திய தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. அதில் பிடிஆர் மகன் தியாகராஜன் அல்லது கட்சியில் சீனியரான தர்மலிங்கம் ஆகிய இருவரில் ஒருவரை களம் இறக்கலாம் என கட்சித் தலைமை முடிவு செய்தது. அமெரிக்காவில் இருந்த தியாகராஜனை இதற்காக சென்னைக்கு உடனே வரவழைத்தார் கருணாநிதி. ஆனால், அழகிரியை மீறி அந்தத் தேர்தலில் தனது முடிவை கட்சித் தலைமையால் நிறைவேற்ற முடியாமல் போனது. அதை மனதிற்கொண்டே யாரும் எதிர்பாராத வகையில் இப்போது மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட தியாகராஜனுக்கு வாய்ப்பு தர கருணாநிதி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

திமுகவில் பிடிஆர் செல்வாக்காக இருந்த சமயங்களில் மதுரை சொக்கிகுளத்தில் உள்ள அவரது பாளையம் இல்லத்தில் கட்சியின் சீனியர்கள் எந்நேரமும் வந்து போய்க் கொண்டிருப்பார்கள். இப்போது அவரது மகனுக்கு திமுகவில் முக்கியத்துவம் கிடைத்திருப்பதால் அந்த மவுசு திரும்புவதாகச் சொல்கிறார்கள் மதுரை திமுகவினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x