

உள்துறைச் செயலாளர் அபூர்வ வர்மா, உளவுத்துறை ஐஜி என்.சத்தியமூர்த்தி, கல்வித் துறை செயலாளர் சபீதா ஆகியோரை இடமாற்றம் செய்ய வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தனித்தனியாக அளித்துள்ள 3 புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
உள்துறைச் செயலாளர் அபூர்வ வர்மா, உளவுத்துறை ஐஜி என்.சத்தியமூர்த்தி ஆகியோர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். மாற்றுக் கட்சியினரின் தொலைபேசி உரை யாடல்களை ஒட்டுகேட்டு ஆளுங்கட்சிக்கு தகவல் அளிப்பதாக செய்திகள் வருகின்றன. எனவே, இவர்களை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.
ஆசிரியர்களை வாக்குச்சாவடி அலுவலர்களாக நியமிப்பதில் கல்வித் துறை முதன்மைச் செய லாளர் சபீதா ஆளுங்கட்சிக்கு சாதக மாக நடந்து கொள்வதாக தகவல்கள் வந்துள்ளன. எனவே, அவரையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.
முதல்வர், அமைச்சர்களின் தொகுதிகளான சென்னை ஆர்.கே. நகர், அண்ணா நகர், ஆயிரம் விளக்கு, ஆவடி ஆகிய பகுதிகளின் உதவி ஆணையர்கள், நத்தம், போடிநாயக்கனூர், தொண்டா முத்தூர், ஒரத்தநாடு, நன்னிலம், மதுரை மேற்கு, சங்கராபுரம், கடலூர், ஸ்ரீவைகுண்டம், குமாரபாளையம், பெருந்துறை, சிவகாசி, சாத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, எடப்பாடி, விராலிமலை, ஜோலார்பேட்டை, திருப்பூர் வடக்கு ஆகிய பகுதிகளில் டிஎஸ்பிக்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட வாய்ப்புள்ளது எனவே, அவர்களை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.
கடந்த ஜனவரி 1-ம் தேதிக்குப் பிறகு இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளின் பட்டியலை ஆய்வு செய்து அதில் தவறுகள் இருந்தால் களைய வேண்டும். சேலம் மாவட்ட எஸ்பி சுபலட்சுமி, திருவாரூர் எஸ்பி ஜெயச்சந்திரன் ஆகியோரையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.