Published : 27 Dec 2021 12:21 PM
Last Updated : 27 Dec 2021 12:21 PM
திருவண்ணாமலை: செங்கம் அருகே மேல்பென்னாத்தூர் கிராமத்தில் சோழர் கால மற்றும் விஜயநகர நாயக்கர் கால கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தி.மலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆய்வு நடுவம் நிர்வாகி பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தி.மலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்பென்னாத்தூர் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டை கல்வெட்டு அறிஞர் ராஜகோபால் ஆய்வு செய்தார். அதில், முதலாம் பராந்தக சோழனின் 20-வது ஆட்சியாண்டில் (பொது ஆண்டு 927-ல்) கல்வெட்டு செதுக்கப்பட்டுள்ளது.
மணியக்கல்லை சேர்ந்த குணவரன் அம்பலவன் மாதேவன் என்பவர் மேல் வேணாட்டு புன்னாத்தூரில் ஏரி மற்றும் கிணறு அமைத்து விளை நிலங்களை உண்டாக்கி உள்ளனர். இதனை வலிகண்ட படையார் பாதுகாக்க வேண்டும் என கேட்டு, ஏரிக்கு அடிப்படையின் பெயரை கொடுத்து வலிகண்டப்பேரேரி என பெயரிட்டு பெருமைப்படுத்தி உள்ளார். அந்த ஏரி பாசனத்தில் உள்ள பெரிய விளைச்சல் நிலத்தை தனது பெயரிட்டு குணவரன் மாதேவி என அழைத்துள்ளார்.
படையின் பயன்பாட்டுக்காக கிணற்றின் கிழக்கில் அமைந்த கீழைப்பட்டி என்ற நிலத்தை படையில் உள்ள அம்பலத்தரையன் என்பவருக்கு பூவில் நீர்வாத்து கொடுத்துள்ளார். கீழைப்பட்டி என்பதை கிழமைப்பட்டி என படித்தால், நிலத்தின் உரிமை என பொருள்படும் என தெரிவித்துள்ளார். கல்வெட்டின் முதல் வரிகள் வலதுப்புறம் சற்று சிதைந்துள்ளன. கல்வெட்டில் மணியக்கல் என்பது தற்போதைய மணிக்கல் கிராமமாக இருக்கலாம். புன்னாத்தூர் என்பது தற்போது மேல்பென்னாத்தூர் என மருவியதாக தெரியவருகிறது” என தெரிவித்துள்ளது.
மேலும், இவ்வூரின் காந்தி நகர் ஏரி என்ற இடத்தில் கல்வெட்டு கண் டெடுக்கப்பட்டுள்ளது. அதில், அதனை ஆய்வு செய்ததில் 40 வரிகளில் விஜயநகர காலத்து கல்வெட்டு என தெரியவந்துள்ளது.
இக்கல்வெட்டு (பொது ஆண்டு 1538-ல்) விஜயநகர அரசன் அச்சுததேவமகாராயர் காலத்தில் வெட்டப்பட்டுள்ளது. ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து செங்குன்ற கோட்டத்து பெண்ணை வடகரை ஆடையூர்நாடு செங்கந்தப்பட்டில் இருக்கும் துளுவ நாயக்கரான மஞ்ச நாயக்கர் மகன் தேவப்ப நாயக்கருக்கு அண்ணா நாட்டு தனியூர், தி.மலை மாளிகை மடத்து முதலியாரின் அளித்த தானத்தின்படி, செங்கந்தப்பட்டு புத்தேரி உடைத்து நெடுநாள் ஆனதால் ஏரியே காடுபோல மாறியதாலும் ஏரியை வெட்டி, உடைப்புகளை சரி செய்து, கிணறு வெட்டி சீர் திருத்தம் செய்யும் துரிஞ்சிப்படைக்கு நிலம் தானம் வழங்கியதன், நான்கு புற எல்லையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இரு கல்வெட்டுகளும் ஏரி வெட்டுவித்தும், சீர் செய்தும், அதை தொடர்ந்து பாதுகாக்க நிலம் தானம் அளித்துள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு மூலம் ஊர் பெயர்களும் நிலதானங்கள் பற்றிய குறிப்புகள் கிடைத்துள்ளன. நீர் நிலைகளை பாதுகாக்க, அக்காலத்து அரசர்கள், அதிகாரிகள் மேலாண்மை செய்ய எடுத்து கொண்ட சீரிய முயற்சிகளை பதிவு செய்யும் வரலாற்று சிறப்பு மிக்க கல்வெட்டுகளாகும்” என தெரிவித் துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT