Last Updated : 26 Dec, 2021 09:46 PM

 

Published : 26 Dec 2021 09:46 PM
Last Updated : 26 Dec 2021 09:46 PM

நல்லாட்சி தினம் கொண்டாட பாஜகவுக்கு என்ன தகுதி இருக்கிறது?- நாராயணசாமி கேள்வி

புதுச்சேரி : நல்லாட்சி தினம் கொண்டாட பாஜகவுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (டிச. 26) வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: ‘‘புதுச்சேரி மாநிலத்தில் அதிஷ்டவசமாக இதுவரை ஒமைக்கரான் தொற்று இல்லை. ஆனால் நாம் மெத்தனமாக இருக்கக்கூடாது. அண்டை மாநிலமான தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாடுவது சம்மந்தமாக மாநில அரசும், முதல்வர் ரங்கசாமியும் எடுத்த முடிவு மிகவும் தவறானது. அண்டை மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டதால் வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் அதிகளவில் குவிந்துள்ளனர்.

புத்தாண்டு கொண்டாடுவதன் மூலம் புதுச்சேரியில் ஒமைக்ரான் வேகமாக பரவும், கரோனாவும் அதிகரிக்கும். இதனால் பாதிக்கப்படுகிறவர்கள் புதுச்சேரி மாநில மக்கள் தான். இப்போது வரை கடினமாக முயற்சி செய்து கரோனாவை கட்டுப்படுத்தியுள்ளாம். ஆகவே நாமே கதவுகளை திறந்துவிடக்கூடாது.

புதுச்சேரியில் நூறு சதவீதம் தடுப்பூசி போடப்படவில்லை. ஆகவே முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடையில்லை என்ற முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லையென்றால் புதுச்சேரி மாநிலத்தில் ஒமைக்ரான் வந்தால் அதன் முழு பொறுப்பும் ரங்கசாமியையே சாரும். இதற்காக அவர் மக்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சி தினம் கொண்டாடுகிறார். நல்லாட்சி தினம் என்றால் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், வேலைவாய்ப்பு, மக்கள் மத்தியில் பணப்புழக்கம், வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு, பாதுகாப்பு இவையெல்லாம் இருக்கின்ற நாடு தான் நல்லாட்சி செய்கின்ற நாடாக இருக்க முடியும். ஆனால் இந்திய நாட்டில் அந்தநிலை இருக்கிறதா?

புதுச்சேரி மாநிலத்தில் கூட நல்லாட்சி என்று கூறுகிறார்கள். நல்லாட்சி எங்கே நடக்கிறது. மக்களுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றனவா? முதல்வர் அறிவித்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படகிறதா? சாலைகள் குண்டும் குழியுமாகவும், குடிநீர் உப்பு நீராகவும் இருக்கிறது.

ஆனால் புதுச்சேரியில் உள்ள பாஜகவினர் நல்லாட்சி தினம் கொண்டாடுகின்றனர். புதுச்சேரி மாநிலத்தை பற்றி தெரியாத பாஜக, அதனுடைய தலைவரகள் நரேந்திர மோடியை காப்பியடித்து நல்லாட்சி என்று கூறுகின்றனர். தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்தபோது பிரதமர் நரேந்திர மோடி 4 முக்கிய வாக்குறுதிகளை கொடுத்தார்.

அதில் புதுச்சேரியை பெஸ்ட் மாநிலமாக மாற்றுவோம் என்றார். ஆனால் ஒஸ்ட் மாநிலமாக ஆக்கியுள்ளார். நல்லாட்சி தினம் கொண்டாட பாஜகவுக்கு என்ன தகுதி இருக்கிறது. புதுச்சேரியில் மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. கொலை, கொள்ளை, நில அபகரிப்பு, மாமூல் வேட்டை நடக்கிறது. இதனை முதல்வர் வேடிக்கை பார்த்துக்கொண்டு உட்காந்திருக்கிறார். பாஜகவினர் முதலில் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

மழை நிவாரணம் சிவப்பு அட்டை தாரர்களுக்கு ரூ.5,000 ஆயிரம், மஞ்சல் அட்டை தாரர்களுக்கு ரூ. 4,500 மாநில அரசு நிதியில் இருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது. இது ஒன்றும் நூதனமல்ல. மத்திய அரசு ஏன்? நிதி கொடுக்கவில்லை. மத்தியக்குழு வந்து பார்த்துவிட்டு சென்றனர். அவர்கள் இடைக்கால நிதியாக கொடுத்தது ரூ. 10 கோடி. மீதமுள்ள தொகையை எப்போது கொடுக்கப்போகிறார்கள்.

முதல்வர் ரங்கசாமி ரூ.300 கோடி கொடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதினார். நாங்களும் பிரதமருக்கு கடிதம் எழுதி ரூ. 500 கோடி வழங்க வேண்டும் என்றோம். ஆனால் இதுவரை மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம் அறிவித்து வழங்கப்படவில்லை. ஆகவே விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் கொடுக்க வேண்டும்.’’இவ்வாறு நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x