Last Updated : 26 Dec, 2021 09:10 PM

 

Published : 26 Dec 2021 09:10 PM
Last Updated : 26 Dec 2021 09:10 PM

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தர பிரதமருக்கும் விருப்பம்; கண்டிப்பாக கிடைக்கும்: முதல்வர் ரங்கசாமி 

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்று நம்பிக்கையுள்ளது, பிரதமர் மோடிக்கும் அதற்கான விருப்பமுள்ளது என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி சரஸ்வதி மகாலில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:

கரோனாவிலிருந்து காப்பாற்றிக்கொள்ள தடுப்பூசி அவசியம் என்பதை பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். 80 சதவீதத்தினர் தடுப்பூசி போட்டுள்ளனர். நூறு சதவீதம் வரவேண்டும். மத்திய அரசு உதவியோடு மாநில வளர்ச்சியை கொண்டுவருவோம். மாநிலத்துக்கு தேவையான நிதியை மத்திய அரசிடம் கேட்டுபெறுவோம். மத்திய அரசு உதவும் என்ற நம்பிக்கையுள்ளது. மாநில அந்தஸ்து புதுச்சேரிக்கு வேண்டும். அதை நான் மறக்கவில்லை. மாநில அந்தஸ்து கோரிக்கையை வைத்துதான் கட்சியே தொடங்கினோம்.

அதை இப்போதும் வலியுறுத்தி வருகிறோம். பிரதமர் மோடிக்கும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தரவிருப்பம் உள்ளதுடன் கவனத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார். மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மாநில அந்தஸ்து தேவை என்பதை பத்திரிக்கைகளும் வலியுறுத்தவேண்டும்.

பத்திரிக்கைகள், தொலைக்காட்சி செய்திகளை மக்கள் நம்புகிறார். அது சரியான வழியில் வருவது அவசியம். மக்கள் நம்பும் போது சரியானதாக தரவேண்டும். விடுப்பட்டோருக்கு மனைப்பட்டா தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

துணைநிலை ஆளுநர் தமிழிசை பேசுகையில், "புதுச்சேரியில் கரோனா மற்றும் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதில் பத்திரிகைகள் மிகவும் சிறப்பாக பணியாற்றின. பத்திரிகைகள் மூலமாக கிடைக்கும் தகவல்களால் தகுந்த நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுக்க முடிந்தது.

முதன்முதலாக பத்திரிக்கையாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்திய பெருமை புதுச்சேரிக்கு உண்டு.

பத்திரிக்கைகள் அரசுடன் இணைந்து சமுதாயத்திற்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்." என்று குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் பேரவைத்தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், எம்பி செல்வகணபதி, எம்எல்ஏக்கள், உயர் அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் ராஜா தலைமை வகித்தார். சங்கச்செயலர் ஸ்ரீதர் வரவேற்புரை ஆற்றினார். பொருளாளர் ஆனந்தி நன்றி கூறினார். மூத்த செய்தியாளர்கள் நிகழ்வில் கவுரவிக்கப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x