

தமிழகத்தில் சாதிக் கொடுமைகளும், வன்முறைகளும் நின்றபாடில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட கேள்வி- பதில் வடிவ அறிக்கையில், ''தமிழகத்தில் சாதிப் படுகொலைகள் அதிகம் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையமே குற்றஞ்சாட்டியிருக்கிறது.
பெரியார் காலத்திலிருந்து சாதிப் பாகுபாடு, சாதி வெறி, சாதிப் பெயரால் பகை ஆகியவற்றை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் தமிழகத்திலே சாதிக் கொடுமைகளும், வன்முறைகளும் நின்றபாடில்லை.
இரண்டு நாட்களுக்கு முன்பு கூட திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டைக்கு அருகில் குமரலிங்கம் கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் சங்கர், தான் காதலித்து மணந்த கவுசல்யா என்ற பெண்ணுடன் நடந்து சென்ற போது படுகொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டாண்டுகளுக்கு முன்பு தர்மபுரியில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றபோது 11-11-2012 அன்றே நான் கண்டித்து கருத்து கூறியிருந்தேன்.
தற்போது தேசிய மனித உரிமைகள் ஆணையம், உடுமலைப்பேட்டை சம்பவம் பற்றி தானாக முன்வந்து புகாரைப் பதிவு செய்துள்ளது. கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, திண்டுக்கல், நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்ததாகவும் செய்தி வந்துள்ளது. இதிலே குற்றவாளிகள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பதோடு, சமுதாயத்தில் இதுபோன்ற சம்பவம் இனியும் நடக்காமல் இருக்க, அரசாங்கம் உரிய நடைமுறைகளை வகுத்துப் பின்பற்றி மக்களிடையே சாதிக் கொடுமை நீங்கிட வழிவகுத்திட வேண்டும்.
அனைத்துச் சாதி மக்களிடையே ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும், மனிதநேய மனப்பான்மையையும் உருவாக்கிட அனைத்து தரப்பிலும் ஆக்க பூர்வமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்'' என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.