வேளாண் பொறியாளர் தற்கொலை விவகாரம்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீதான வழக்கு ரத்து

வேளாண் பொறியாளர் தற்கொலை விவகாரம்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீதான வழக்கு ரத்து
Updated on
2 min read

வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்தது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீதான வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

நெல்லையைச் சேர்ந்த வேளாண் செயற் பொறியாளர் முத்துக்குமாரசாமி, கடந்த ஆண்டு பிப். 20-ம் தேதி தென்காசியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். நெல்லை மாவட்டத்தில் வேளாண் துறையில் தற்காலிக ஓட்டுநர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களிடம் தலா ரூ.1.75 லட்சம் பணம் வசூல் செய்து தரும்படி வற்புறுத்தியதால் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்டதாக அவர் மனைவி சரஸ்வதி போலீஸில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக அப்போதைய வேளாண் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தலைமைப் பொறியாளர் செந்தில் மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளர் பூவையா ஆகியோர் மீது ஊழல் தடுப்பு பிரிவு 7, கூட்டுச்சதி, தற்கொலைக்கு தூண்டியது ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் நெல்லை நீதிமன்றத்தில் போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் தன் மீதான இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அக்ரி கிருஷ்ணமூர்த்தி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், ''என் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியாது. தற்கொலை செய்து கொண்ட முத்துக்குமாரசாமியிடம் நான் நேரடியாக பணம் கேட்டு மிரட்டியதாக எந்த குற்றச்சாட்டும் இல்லை. எனவே, என் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்'' எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி போலீஸ் தரப்பில் அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞர் சண்முகவேலாயுதம் வாதிடும்போது, ''முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு தொடர்பிருப்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் தூண்டுதல் பேரில் தான் ஓட்டுநர் நியமனத்துக்கு பணம் கேட்டு முத்துக்குமாரசாமியை மிரட்டியதாக அவரது உதவியாளர் பூவையா வாக்குமூலம் அளித்துள்ளார். எனவே வழக்கை ரத்து செய்யக்கூடாது'' என்றார்.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரமேஷ், வழக்கறிஞர் சண்முகராஜா சேதுபதி வாதிடும்போது, ''லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தால், அந்த வழக்கின் குற்றப்பத்திரிகை சிறப்பு நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் இந்த வழக்கில் நீதித்துறை நடுவர் மன்றத்தில் போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். தற்கொலை செய்து கொண்ட முத்துக்குமாரசாமியை அக்ரி கிருஷ்ணமூர்த்தி நேரடியாக தொடர்பு கொண்டு பேசியதற்கோ, பணம் கேட்டு மிரட்டியதற்கோ எந்த ஆதாரமும் இல்லை. எனவே அவர் மீதான இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்'' என்றனர்.

இந்த வழக்கு நீதிபதி வி.எஸ்.ரவி இன்று தீர்ப்பளித்தார். அதில், பொறியாளர் முத்துக்குமாரசாமியை தற்கொலைக்கு தூண்டிய சம்பவத்தில், அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு நேரடி தொடர்பு இருப்பதற்கும், அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை. இதனால் அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in