வரலாற்று ஆய்வாளர் ல.தியாகராஜன் காலமானார்

வரலாற்று ஆய்வாளர் ல.தியாகராஜன் காலமானார்
Updated on
1 min read

அரியலூரில் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வரலாற்று ஆய்வாளர் ல.தியாகராஜன்(65) நேற்று உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ல.தியாகராஜன். அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வந்த இவர், கடந்த 2014-ல் ஓய்வு பெற்றார்.

அரியலூர் வட்டாரத்து வரலாற்றுத் தொல்லியல் கி.பி.1817 வரை ஓர் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற இவர், கடந்த 30 ஆண்டுகளாக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் குறிப்பாக அரியலூர், பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் கல்வெட்டு, தொல்லியல் கோயில் கலை ஆய்வுகளில் ஈடுபட்டு, பல்வேறு நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

டாக்டர் கோ.தங்கவேலுவுடன் இணைந்து எழுதிய ‘சம்புவராயர் வரலாறு’ என்ற நூல் வரலாற்று அறிஞர்களின் பாராட்டைப் பெற்றது. இவர், எழுதிய நூல்களில், சோழகேரளன், கானக்களியூர் நாடு, அரியலூர் ஜமீன்தார்களின் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை.

மேலும், அரியலூர், பெரம்பலூர் மாவட்ட கல்வெட்டுகள், சோழர் காலச் சிற்றரசர்கள் வரலாறு உள்ளிட்ட ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். இவருக்கு திருமழபாடி தமிழ்ச் சங்கம் வரலாற்றுச் செம்மல் என்னும் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அரியலூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இவரது உடல் சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு இன்று (டிச. 26) அடக்கம் செய்யப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in