

தி.மலை அண்ணாமலையார் கோயில் அம்மணி அம்மன் கோபுரம் முன்பு பாதாள சாக்கடையில் இருந்து நேற்று கழிவுநீர் வெளியேறி, சாலையில் தேங்கி துர்நாற்றம் வீசியதால் பக்தர்கள் அவதிப்பட்டனர்.
திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் மார்கழி மாத சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. இதையொட்டி, உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாவட்ட பக்தர்கள் மற்றும் சபரி மலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு செல்லும் செவ்வாடை பக்தர்களின் வருகை அதிகளவில் உள்ளன. அவர்கள் அனைவரும் ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுர வாசல் வழியாக, கோயில் உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்நிலையில் அம்மணி அம்மன் கோபுர வாசல் முன்பு வட ஒத்தவாடை வீதியில், இரண்டு இடங்களில் உள்ள பாதாள சாக்கடை குழாயில் இருந்து கழிவுநீர் நேற்று காலை அதிகளவில் வெளியேறியது. இதனால், அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. மேலும், சாலை முழுவதும் கழிவுநீர் சூழ்ந்து கொண்டது. இதன் எதிரொலியாக, அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அவதிப்பட்டனர். கழிவு நீரில் நடந்தும், துர்நாற்றத்தை தாக்கு பிடிக்க முடியாமல் மூக்கை மூடிக் கொண்டும் சென்றனர். பாதாள சாக்கடையில் உள்ள அடைப்புகளால் கழிவுநீர் வெளி யேறுகிறது.
இதுகுறித்து பக்தர்கள் கூறும் போது, ‘திருவண்ணாமலை நகரில் பல இடங்களில் உள்ள பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறுகிறது.
அதில் ஒரு பகுதியாக, அண்ணாமலையார் கோயில் அம்மணி அம்மன் கோபுர வாசல் முன்பு உள்ள வட ஒத்தவாடை வீதியிலும் கழிவுநீர் வெளியேறி வருகிறது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டு, நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும் பலனில்லை.
பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர், அடிக்கடி வெளியேறு வதால் துர்நாற்றம் வீசுகிறது. கோயிலுக்கு மனநிறைவுடன் செல்ல முடியாமல் பக்தர்கள் தவிக்கின்றனர். இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
கோயில் மாட வீதி, வட மற்றும் தென் ஒத்த வாடை வீதி களை தூய்மையாக வைத்திருக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.