

சென்னை: "ஜனநாயகத்தில் கட்சிகளுக்கு இடையே ஆரோக்கியமான கருத்து மோதல்கள் இருக்கலாம்; ஆனால், அடிதடி மோதல் என்பது கேலிக் கூத்தாகிவிடும்" என்று திமுகவினரை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமரித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "பொதுவாகவே திமுக ஆட்சியை பொறுத்தவரை எதிர்க்கட்சியினரின் குரல் நெரிக்கப்படும். குறிப்பாக அதிமுகவின் குரல் நெறிக்கப்படும். ஸ்டாலின் ஆட்சியில் இல்லாதபோது அரசுக்கு எதிராக எது வேண்டுமானாலும் பேசுவார்; எப்படி வேண்டுமானாலும் பேசுவார். பொதுவெளியில் யார் வேண்டுமானாலும் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம்; அதுதான் ஜனநாயக நிலை. ஒரு கட்சி என்று இருந்தால் நிச்சயம் விமர்சனங்கள் வருவது வழக்கம். அதனை பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு கட்சி என்றால், அது திராவிட முன்னேற்ற கழகம்தான்.
கடந்த ஆட்சிக் காலத்தில் அதிமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை திமுகவினர் முன்வைத்தனர். அதனை அதிமுகவினர் தாங்கிக் கொள்ளவில்லையா? ஜனநாயகத்தில் கட்சிகளுக்கு இடையே ஆரோக்கியமான கருத்து மோதல்கள் இருக்கலாம்; ஆனால், அடிதடி மோதல் என்பது கேலிக் கூத்தாகிவிடும். அதிமுகவினர் மீது தாக்குதல் வன்முறையை திமுகவினர் கையில் எடுத்துள்ளனர்.
அரசியலில் கட்சி ஒன்று வன்முறையை கையில் எடுப்பது என்பதை ஜனநாயகவாதிகள் ஏற்க மாட்டார்கள். இந்த நிலை தொடர்ந்தால் சட்டம் - ஒழுங்கு கேலிக் கூத்தாகிவிடும். பல மாவட்டங்களில் நிகழும் வன்முறைகளை திமுக ஆட்சியால் கட்டுப்படுத்த முடியவில்லை. மாவட்டம் முழுவதும் அடிதடி, வெட்டுக் குத்து வன்முறையாக உள்ளது. நாட்டு மக்களின் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதே ஓர் அரசின் கடமை. அதனை விட்டுவிட்டு அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவர்கள் மீது தாக்குதல் நடத்துவது என்பது பொதுக் கருத்துக்களை தெரிவிக்கும் பொது ஊடங்களை அச்சுறுத்தும் வகையில் எச்சரிக்கையாக பார்க்க வேண்டியுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் தொகுதி மக்களின் அழைப்பின்பேரில் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் திமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். வன்முறையை கையில் எடுக்க அதிமுகவினருக்கும் தெரியும்; நாங்கள் வெகுண்டு எழுந்தால் திமுகவினர் நிலை என்ன ஆகும்? அதிமுகவினர் அனைவரும் வீரம் செறிந்தவர்கள். திமுகவினரின் அச்சுறுத்தலுக்கு பயப்படும் கட்சி, அதிமுக இல்லை.
இதேபோல் நாம் தமிழ் கட்சியினர் மீதும் திமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். சமூக வெளியில் யாரும் கருத்து தெரிவிக்கக் கூடாது என்பது திமுகவினரின் எண்ணமா? ஏற்கெனவே திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு மோசமாக இருக்கு நிலையில் உள்ளது. அதனை மேலும் மோசமான நிலைக்கு திமுகவினர் கொண்டு செல்கின்றனர்" என்றார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.