

சென்னை: வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு 7 நாள் தனிமை கட்டாயம் என்று மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமண்யன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 34 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். எனினும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் லேசான அறிகுறியே இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பங்கெடுத்த மா. சுப்பிரமண்யன் பேசும்போது, “ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட 34 பேரில் 12 பேர் குணமடைந்தனர். நாளைமுதல் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் கட்டாயமாக 7 நாள் தனிமையில் இருக்க வேண்டும். ஒமைக்ரான் வேகமாக பரவும் என்பதால் நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாங்களை தவிருங்கள். கூட்டமாக புத்தாண்டு கொண்டாட்டங்களில்ஈடுபட வேண்டாம்.
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பிற மாநிலங்களுக்கு செல்வதை மக்கள் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் விரைவாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.