

ராயப்பேட்டையில் போக்கு வரத்துக்கு இடையூறாக உள்ள பொதுக் கழிப்பிடத்தால் அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருவதாக வாசகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ‘தி இந்து’ உங்கள் குரல் சேவை வழியாக ராயப்பேட்டையைச் சேர்ந்த வாசகர் ஒருவர் கூறியதாவது:
ராயப்பேட்டையில் கவுடியா மடம் சாலை- அம்மையப்பன் தெரு சந்திப்பில், தெருவை ஆக்கிரமித்து மாநகராட்சி பொது கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து அதிக அளவில் மனிதக் கழிவுகள் வெளியேறுவதால், தெருவில் உள்ள கழிவுநீர் குழாயில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தெருக்களில் ஓடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மழை காலத்தில் அங்கு கழிவுநீருடன் மழைநீர் தேங்கி, கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகின்றன. சாலை சந்திப்பில் கழிப்பிடம் அமைந்திருப்பதால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் அப்பகுதி வாழ் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். இது தொடர்பாக 118-வது வார்டு கவுன்சிலரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அங்கு இயங்கி வரும் கழிப்பிடத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என்றார்.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “அந்த கழிப்பிடம் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. அதை சுத்த மாகத்தான் பராமரித்து வருகி றோம். துர்நாற்றம் வருவதில்லை. எப்போதாவது அப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறும். அதற்கும் இந்த கழிப்பிடத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இதை அகற்றக்கோரி எங்களிடம் யாரும் புகார் தெரிவிக்கவில்லை. புகார் கொடுத்தால் பரிசீலிக்கப்படும்” என்றார்.