Published : 25 Dec 2021 12:24 PM
Last Updated : 25 Dec 2021 12:24 PM
சென்னை: கிணற்றில் போட்ட கல்லாக கிடைக்கு நீட் விலக்கு கோரிக்கை, அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி விவாதிக்க அணைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக நிறூவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
"தமிழ்நாட்டில், ஒருபுறம் நீட் தேர்வு அடுத்தடுத்து மாணவர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கிறது; மற்றொரு புறம் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை தென்படவில்லை. நீட் விலக்கு நடவடிக்கை தமிழக மாணவர்களை பிணையாக வைத்து நடத்தப்படும் பகடை ஆட்டமாக மாறிவிடக்கூடாது. ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவு சிதையக்கூடாது.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட 2017-ம் ஆண்டு முதலே, மருத்துவக் கல்வி கனவை நனவாக்க முடியாத ஏழை மாணவர்களின் தற்கொலைகள் தொடர் கதையாகி விட்டன. கடந்த ஆண்டில் மட்டும் நீட் அச்சம், குறைந்த மதிப்பெண்கள் காரணமாக 15 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். நடப்பாண்டிலும் அதே நிலை தொடர்கிறது. நீட் தேர்வு நடைபெற்ற செப்டம்பர் 12-ம் தேதிக்கு முந்தைய நாளில் இருந்து கடந்த வாரம் வரை 7 மாணவர்கள் நீட் அச்சத்தாலும், மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்காததாலும் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.
அந்த எண்ணிக்கை இப்போது எட்டாக உயர்ந்திருக்கிறது. நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலியைச் சேர்ந்த ஜெயா என்ற மாணவி நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். நீட் தேர்வு இன்னும் எத்தனை மாணவ, மாணவியரின் இன்னுயிரையும், லட்சியங்களையும் பறிக்கும்? என்று தெரியவில்லை.
நீட் தேர்வால் மாணவர்கள் உயிரிழக்கக்கூடாது என்ற நோக்குடன் தமிழ்நாட்டிலுள்ள மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2017-ம் ஆண்டில் இதற்காக நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டங்களுக்கு ஆளுனர் ஒப்புதல் அளித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்த போதிலும், அச்சட்டங்களை மத்திய அரசு ஆய்வுக்குக் கூட எடுத்துக் கொள்ளாமல் திருப்பி அனுப்பி விட்டது.
அதன்பின் தமிழகத்தில் புதிதாக பதவியேற்ற திமுக அரசு, நீட் விலக்கு சட்டத்தை கடந்த செப்டம்பர் 13-ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பி வைத்தது. அதன்பின் 105 நாட்களாகும் நிலையில், அச்சட்டத்திற்கு இன்று வரை ஆளுனரின் ஒப்புதல் கிடைக்கவில்லை; எப்போது ஒப்புதல் கிடைக்கும் என்பதும் தெரியவில்லை.
நீட் விலக்கு சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் அளித்தால் கிடைத்தால் மட்டும் தான் அதை நடைமுறைப்படுத்த முடியும். அதற்கு முதலில் ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். மத்தியில் உள்துறை, சுகாதாரத்துறை, சட்டத்துறை ஆகிய அமைச்சகங்களின் பரிந்துரைகளைப் பெற்று, இறுதியாகத்தான் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற முடியும். ஒவ்வொரு கட்டத்தை கடப்பதும் பெரும் சோதனையாக இருக்கும். ஆனால், ஆளுநரின் ஒப்புதலைப் பெறுவதற்கான முதல் கட்டத்தையே இன்னும் நீட் விலக்கு சட்டம் தாண்டவில்லை.
இத்தகைய சூழலில் நீட் தேர்விலிருந்து எப்போது விலக்கு கிடைக்கும்? என்ற வினாவுக்கு, எப்போது புறப்படும் என்பதே தெரியாத தொடர்வண்டி எப்போது இலக்கை சென்றடையும்? என்ற எதிர்வினா தான் மிகவும் பொருத்தமான பதிலாக இருக்கும்.
தமிழ்நாட்டில் நடப்பாண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறைகள் நீட் தேர்வின் அடிப்படையில் ஏற்கனவே தொடங்கி விட்டன. அடுத்தக் கல்வியாண்டு தொடங்க இன்னும் ஆறு மாதங்கள் மட்டுமே உள்ளன. நடப்பாண்டில் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றுத் தர வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த போது, புதிய அரசு இப்போது தான் பதவியேற்றிருக்கிறது என்பதால், அடுத்த கல்வியாண்டிலிருந்து நீட் தேர்வுக்கு விலக்கு பெறப்படும் என்று அரசுத் தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அடுத்தக் கல்வி ஆண்டுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், நீட் விலக்குக்கான அறிகுறிக் கூட தென்படவில்லை.
அடுத்த கல்வியாண்டில் நீட்டுக்கு விடை கொடுக்கப் போகிறோமோ.... அல்லது நீட்டுக்கு மாணவர்களை தொடர்ந்து பலி கொடுக்கப் போகிறோமா? என்பது தான் இப்போது நம் முன் உள்ள கேள்வி. கடந்த ஐந்தாண்டுகளில் நீட்டுக்கு 70-க்கும் மேற்பட்டவர்களை பலி கொடுத்திருக்கிறோம். இனி ஒருவரைக் கூட பலி கொடுக்கக் கூடாது. அதற்கான ஒரே தீர்வு நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெறுவது தான்.
நீட் தேர்வு கிராமப்புற, ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கிறது என்பது ஒருபுறமிருக்க, அது மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் செயலுமாகும். நீட் விலக்கு சட்டத்தை நிறைவேற்றி விட்டோம் என்பதுடன் அரசு ஒதுங்கி விடக் கூடாது. அடுத்த சில மாதங்களுக்குள் நீட் விலக்கு சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, அடுத்த ஆண்டு முதல் 12ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். அதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அரசு கூட்ட வேண்டும்."
இவ்வாறூ ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT