Published : 25 Dec 2021 10:54 AM
Last Updated : 25 Dec 2021 10:54 AM

கர்நாடகம், கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்ற காவிரி, முல்லை பெரியாரை தாரைவார்க்க முடியுமா?- பி.ஆர்.பாண்டியன் கேள்வி

கோப்புப் படம்

சென்னை: காங்கிரஸ் கட்சி கர்நாடகம்,கேரளாவில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காகவும் காவிரியையும்,முல்லை பெரியாரையும் தாரைவார்த்து விடமுடியுமா? என தமிழக அனைத்து விவசாயிகள சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

"தமிழகத்தில் காவிரி பிரச்சனை 50 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வந்தது. தொடர்ந்து 40 ஆண்டு காலம் காங்கிரஸ் கட்சி ஆட்சி காவிரி பிரச்சனையில் தமிழக நலனுக்கு எதிராக செயல்பட்டு வந்தது.
காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு 2007-ல் நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கியது. அரசிதழில் வெளியிட அன்றைக்கு ஆட்சியில் இருந்த மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி 2013 வரையிலும் மறுத்து வந்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்காலும், தமிழக விவசாயிகளின் ஒன்று பட்ட போராட்டத்தால் அரசிதழில் வெளியிடப்பட்டது.

அதனை தொடர்ந்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழகத்தில் காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி ஒத்தக் கருத்தோடு மத்திய பாஜக ஆட்சிக்கு எதிரான தீவிரமான போராட்டத்தால் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.

இன்றைக்கு தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்படுகிற நிலை உருவாகி இருக்கிறது. அது மட்டுமல்ல காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு முழுநேர தலைவரையும் நியமனம் செய்து உச்சநீதிமன்ற வழிகாட்டுதலோடு காவிரியின் தமிழக உரிமை முழுமையாக மீட்கப்பட்டு தமிழகம் தற்போது அமைதி பூங்காவாக திகழ்ந்து வருகிறது, இதற்கு ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளும் தமிழக விவசாயிகளும் ஒன்று பட்டு நடத்திய போராட்டம் தான் காவிரி உரிமையை மீட்பதற்கு வழிவகுத்தது.

ஆனால் அந்த போராட்டக்களத்தில் கே.எஸ்.அழகிரி துளியும் பங்கேற்காதவர். தனக்கு தற்போது காங்கிரஸ் கட்சியினுடைய மாநில தலைவர் பதவி கிடைத்ததை தக்கவைத்துக் கொள்வதற்காக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் நோக்கோடு காவிரி போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகளை பச்சைத் துண்டு போட்டவர்கள் எல்லாம் தலைவர்களா? என்று கொச்சை படுத்துகிற கேவலமான அறிக்கை விட்டிருப்பது ஒட்டு மொத்த தமிழக விவசாயிகளை கேவலப்படுத்துவதாகும்.

போராடிவரும் விவசாயிகளை மனரீதியாக பாதிக்கும் நிலை உருவாக்கி உள்ளார். மேலும் புதிதாக பொருப்பேற்றுள்ள திமுக ஆட்சிக்கும் நெருக்கடியை உருவாக்க முயற்சித்துள்ளதாக தெரிகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பதற்காக தமிழகத்தின் காவிரி உரிமையை விட்டுக் கொடுக்க முடியுமா? மேகதாதுவில் அணை கட்டி தமிழகம் அழிவதற்கு தமிழக விவசாயிகள் துணை போக முடியுமா? இதனை எதிர்த்து குரல் கொடுத்தால் உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுக்களை சொல்லி விவசாயிகளை கொச்சைப்படுத்துவது நியாயம்தானா?

கேரளாவில் முல்லைப் பெரியாறு அணையை உடைத்து விடவேண்டும் என்று சட்டமன்றத்திலேயே கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொடுத்து விஷமப் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டு வருகிறது. அதனை எதிர்த்து முல்லைப் பெரியாறு அணையை பாதுகாப்பதற்காக அப்பகுதி விவசாயிகளை ஒன்று படுத்துவதை கே.எஸ்.அழகிரியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையா?

கே எஸ் அழகிரி தனது பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காகவும், காங்கிரஸ் கட்சி கர்நாடகம்,கேரளாவில் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்பதற்காக காவிரியையும், முல்லை பெரியாரையும் தாரைவார்த்து விடமுடியுமா?
தமிழக விவசாயிகள் பாஜக ஆட்சிக்கெதிராக உறுதியோடு போராடினோம். இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய தோல்வியை நாடாளுமன்ற தேர்தலில் சந்தித்தாலும், காங்கிரஸ் கட்சியை அகில இந்திய அளவில் அடையாளப்படுத்தும் வகையில் தமிழகத்தில் திமுக தலைமையில் நாடாளுமன்ற தேர்தலில் 38 தொகுதிகளில் வெற்றி பெற வைத்தோம். பாஜக-விற்கு எதிராக விவசாயிகள் ஒன்று பட்டு வாக்களித்ததார்கள் என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

அவ்வாறு வாக்களித்து வெற்றி பெற செய்த எங்களை விமர்சிக்கும் அளவிற்கான வாய்ப்பும், பதவியும் கிடைத்திருக்கிறது என்பதற்காக எங்களை கேவலப் படுத்தலாமா?

நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி மட்டுமல்ல தமிழக சட்டமன்ற தேர்தலிலும் மாபெரும் வெற்றியை பாஜக-அதிமுக கூட்டணிக்கு எதிராக விவசாயிகள் ஒன்று பட்டு வழங்கியதே காவிரி உரிமைக்கான போராட்டம் தான் அடித்தளமிட்டது என்பதை உணரவேண்டும்.

அதற்கு முழுத் துணையாக திமுக தலைவராக இருந்த மறைந்த கருணாநிதி, ஸ்டாலின் இருவரும் விவசாயிகளோடு இணைந்து முழுமையான போராட்டத்தில் ஈடுபட்டதால் ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளும் அவர் பின் அணிவகுத்தனர். இது தமிழகமே அறிந்த ஒன்று மட்டுமல்ல, இந்திய அரசியல்வாதிகளும் அதை புரிந்துள்ளனர்.

தற்போது தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் பாஜக கட்சி தோல்வியடைந்த நிலையில், திமுக தலைமையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பிறகு தமிழகத்திற்கு எதிராக நடத்திய துரோக செயல்களை கைவிட்டுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தன் அரசியல் லாபத்திற்காக மேகதாது அணை கட்ட வேண்டும் என்று பாதயாத்திரை நடத்துவதை அழகிரி ஆதரிக்கிறாரா? அவருக்காக காவிரியை விட்டுவிட முடியுமா? முல்லைப் பெரியாறு அணையை உடைத்து புதிய அணை கட்ட அழகிரி ஆதரிக்கிறாரா? இதை தெளிவு படுத்த தயாரா? பொதுவெளியில் விவாதிக்க தயாரா?

உயிரை பணயம் வைத்து அரசியலுக்கு அப்பாற்பட்டு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போராடுகிற விவசாயிகளை பச்சை துண்டு போட்டவர்கள் எல்லாம் விவசாயிகளா? என்று கேவலப்படுத்துவது காங்கிரஸ் கட்சிக்கு அழகல்ல இதோடு விவசாயிகளை அறிக்கை என்ற பேரில் பிளவுபடுத்த நினைக்கும் முயற்சியை நிறுத்திக் கொள்ள வேண்டும். தொடர்ந்து விவசாயிகள் மீது அவதூறு பிரச்சாரங்களை அழகிரி தொடருவாரேயானால் அரசியல் ரீதியாக மிகப்பெரும் பின்னடைவை சந்திக்க வேண்டிவரும் என எச்சரிக்கிறேன்.

காங்கிரஸ் கட்சி அகில இந்திய தலைமை அழகிரிக்கு உரிய அரசியல் ஆலோசனைகள் வழங்க வேண்டும். அவருக்கு தலைமைத்துவ பண்பை வழங்க வேண்டும். விவசாயிகளை மதித்து நடந்து கொள்வதற்கு அறிவுரை வழங்க வேண்டும். மேகதாது அணை கட்டுமானத்தை தடுத்து நிறுத்த பெருந்தலைவர் காமராஜர் அடிக்கல் நாட்டிய ராசிமணல் அணை கட்ட தமிழக விவசாயிகள் போராடினால் தவறா? அவர் கூற்றுப்படி தமிழக விவசாயிகள் ஒதுங்கிவிட முடியுமா?

எங்கள் வாழ்வாதாரமே காவிரியையும், முல்லைப்பெரியாரையும் நம்பி இருக்கிறது. நாங்கள் காங்கிரஸ் கட்சியை நம்பி இல்லை. காவிரி தான் எங்கள் வாழ்க்கை என்கிற போது அதைக் காப்பதற்கு எங்கள் உயிரை கொடுத்து மீட்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை அழுகிரி உணரவேண்டும் மேகதாட்டுவிற்காக போராடும் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சிக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். வலிமையோடு நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் அழகிரி போன்றவர்கள் கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கி மேகதாட்டு அணை கட்டுவதற்காக போராடக் கூடாது என்பதை வலியுறுத்த தயாரா? காங்கிரஸ் கட்சி அகில இந்திய தலைமையிடம் எடுத்துக் கூறி தடுத்து நிறுத்த தயாரா?

காங்கிரஸ் கட்சி அகில இந்திய தலைமை மூலம் இரு மாநிலங்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையை சட்டரீதியாக அனுகுவதற்கு கர்நாடக, கேரளா மாநில காங்கிரஸ் கட்சிகளுக்கு ஆலோசனை வழங்க அழகிரி முன்வரவேண்டும். இதையெல்லாம் விட்டுவிட்டு தமிழக விவசாயிகளை அழகிரி போன்றவர்கள் கொச்சைப்படுத்துவது காங்கிரசுக்கு வீழ்ச்சி தானே தவிர, வளர்ச்சி இல்லை என்பதை காங்கிரஸ் கட்சி அகில இந்திய தலைமையும், தமிழக தலைவர்களும் உணர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்."

இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x