Published : 25 Dec 2021 06:43 AM
Last Updated : 25 Dec 2021 06:43 AM

அமைதி, நல்லிணக்கத்தை நமக்கு போதிக்கும் திருநாள்: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் கிறிஸ்துமஸ் தின வாழ்த்து

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்திகளில் கூறியிருப்பதாவது:

ஆளுநர் ஆர்.என்.ரவி: மனித நேயத்தைக் காப்பதற்காகவே இவ்வுலகில் அவதரித்து, பல்வேறு இன்னல்களைத் தாங்கிய புனித இயேசு கிறிஸ்து, குன்றாத அன்பையும் மன்னிப்பையும் நமக்குப் பரிசாகத் தந்தவர். தமிழகத்தின் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கு என்னுடைய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மையை உணர்த்தும் வகையில், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நமக்குப் போதிக்கும் திருநாளாகும்.

இத்தருணத்தில், இயேசு கிறிஸ்துவின் போதனைகளை முழுமையாக நாம் கடைபிடிக்க வேண்டும். நம்மைக் காட்டிலும் வறியவர்களிடம் கருணை புரியவேண்டும். அமைதி,பொறுமை மற்றும் நல்லிணக்கம் என்ற வலுவான அடித்தளத்தினால் சிறப்பான உலகைக் கட்டமைக்க நம்மால் இயன்ற வகையில் பங்காற்றுவோம்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்: அன்பு, சகோதரத்துவம், அமைதி, தியாகம் எளிமை, ஈகை ஆகியவற்றை உலகுக்குப் போதித்த இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளில் அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள். ஒமைக்ரான் கரோனா பரவி வரும் சூழலில் பாதுகாப்பு நடைமுறைகளை அனைவரும் பின்பற்றி கிறிஸ்துமஸ் விழாவை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு என்ற ஈகை பண்பு, சகிப்புத்தன்மை, அகிம்சை, எதிரிகளையும் நேசியுங்கள், பகைவருக்கும் நன்மை செய்யுங்கள் என எந்த காலத்துக்கும் போற்றத்தக்கஉயர்ந்த அன்பையும் போதித்த மனிதநேயமாணிக்கம் இயேசு கிறிஸ்து பிறந்தநாளை கிறிஸ்தவ மக்கள் கிறிஸ்துமஸ் பெருவிழாவாகக் கொண்டாடுகின்றனர்.

அன்பும் அமைதியும் அனைவரது வாழ்விலும் தவழ்ந்திட வேண்டும் என்ற உயரிய நோக்கோடு இவ்விழா கொண்டாடப்படுவதுடன், அன்பினை பரிமாறிக்கொள்ள ஒருவருக்கொருவர் பரிசுப் பொருட்களையும், ஏழை எளியோருக்கு உதவிகளையும் வழங்கி மகிழ்கின்றனர். கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும் என்று அன்போடு கேட்டு, என் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.பழனிசாமி: உன் மீதுஅன்பு செலுத்துவதுபோல அடுத்தவர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும் என்று எடுத்துரைத்த இயேசு பிறந்தநாளை கிறிஸ்துமஸாக, விருந்தினர்களுடன் இனிய உணவு உண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள். ஆண்டவனின் பிள்ளைகளாகிய நாம் அன்புடனும், சகோதரத்துவ உணர்வுடனும் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் வாழ இந்த இனிய நாளில் உறுதியேற்போம்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: மனிதருக்குள் நல்லுறவும், சமத்துவமும், ஏற்றத் தாழ்வற்ற சமுதாயமும் உண்டாக வேண்டும் என்பதற்காகவே கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. இதற்காகவே கிறிஸ்துமஸ் திருநாளை மாதத்துக்கு ஒருமுறை கூட கொண்டாடலாம். இயேசு விரும்பியதைப் போல உலகம் முழுவதும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ கிறிஸ்துமஸ் போன்ற விழாக்கள் அனைத்து மதங்களிலும் ஈடுபாட்டுடன் கொண்டாடப்பட வேண்டும்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் மனித சமுதாயத்தை அச்சுறுத்தும் ஆபத்திலிருந்து விடுபடுவதற்கு இயேசுவின் அறிவுரைகள் உதவும். மனிதநேயம் மண்ணில் செழிக்கவும், சமய நல்லிணக்கம் ஓங்கவும், சமூக ஒற்றுமை காக்கவும் இந்நன்னாளில் சூளு ரைப்போம்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: சமுதாயமுன்னேற்றத்துக்காகவும், மக்களின் நல்வாழ்வுக்காகவும் இயேசுவின் போதனைகளான கருணை, மன்னிப்பு, அமைதி ஆகிய மாண்புகளை அனைவரும் நம்பிக்கையோடு கடைபிடிக்க வேண்டும். இந்த நல்ல நாளில் கிறிஸ்தவ மக்கள் வாழ்வில் முன்னேற்றம்அடைந்து, எல்லா வளமும் பெற்று, நல்லஉடல்நலத்துடன், மகிழ்வுடன் வாழ வாழ்த்து கிறேன்.

வி.கே.சசிகலா: எல்லாரிடமும் அன்பைப் பொழிந்து கருணையின் வடிவமாய் விளங்கிய இயேசு பிரான் பிறந்த திருநாளில், அவர் போதித்த அன்பு, எளிமை, கருணை போன்ற உயரிய குணங்களை மக்கள் அனைவரும் பின்பற்றி சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: அன்புதான் உலகின் ஆகப் பெரிய சக்தி என்பதை நிரூபித்து அதன் வழியாகவே மக்களின் மனங்களை வென்றெடுத்த இயேசு அவதரித்த கிறிஸ்துமஸ் திருநாளைக் கொண்டாடி மகிழும் கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

காங்கிரஸ் எம்பி சு.திருநாவுக்கரசர்: அன்பு, அமைதி பொறுமை, சகோதரத்துவம், சகிப்புத்தன்மை, மன்னிப்பு, தொண்டு உள்ளிட்ட உயர்ந்த நற்பண்புகளை உலகில் விதைத்த இயேசு கிறிஸ்து பிறந்த இப்புனித நாளில் கிறிஸ்தவ பெருமக்கள் அனைவரின் வாழ்விலும் வளமும், நலமும், பெருகிட வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்

இதுதவிர, ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி,சமக தலைவர் ரா.சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோரும் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x