Published : 25 Dec 2021 07:11 AM
Last Updated : 25 Dec 2021 07:11 AM

48-வது நினைவு தினத்தில் பெரியார் சிலைக்கு முதல்வர், தலைவர்கள் மரியாதை

பெரியாரின் 48-வது நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகே அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்ட உருவப் படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று அஞ்சலி செலுத்தினார். உடன் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள்.

சென்னை: பெரியாரின் 48-வது நினைவு தினத்தையொட்டி அவரது உருவச் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின்மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பெரியாரின் 48-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு கீழே அலங்கரிக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இளைஞர் அணி செயலாளர் உதயநிதிஸ்டாலின், செய்தித் தொடர்பு செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பெரியார் நினைவுநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘ஈராயிரம் ஆண்டுகள் அடக்கப்பட்ட இனத்தின் மான உணர்ச்சியைத் தட்டியெழுப்பி, சுயமரியாதை ஒன்றே அடிமை விலங்கை தகர்த்தெறியும் விடுதலைக்கான வழி எனத் தொண்டாற்றிய பெரியாரின் நினைவுநாளில், ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சிகளை வென்று, திராவிடக் கொள்கைகள் கொண்டு தமிழர் மானம் காக்கச் சூளுரைப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

திமுக மகளிர் அணி செயலாளரும், அக்கட்சியின் நாடாளுமன்ற குழு துணைத் தலைருமான கனிமொழி வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,‘நம் சமூகத்துக்கு எதிரான அனைத்துபிற்போக்கு வாதங்களையும் உடைத்தெறிந்த தத்துவத்தின் பெயர் பெரியார். அவரது முற்போக்கு சிந்தனைகளை நம் முகவரியாய் இதயத்தில் ஏந்துவோம்’ என்று தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கு திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி, துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதலைவர் திருமாவளவன், துணைப் பொதுச் செயலாளர் வன்னிஅரசு. எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் உள்ள பாமக அரசியல் பயிலரங்க வளாகத்தில் பெரியார் சிலைக்கு கட்சி நிறுவனர் ராமதாஸ் மரியாதை செலுத்தினார்.

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ்இளங்கோவன், காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா, எஸ்.டி.ராமச்சந்திரன் எம்எல்ஏ, மத்திய சென்னை கிழக்கு மாவட்டகாங்கிரஸ் தலைவர் சிவ.ராஜசேகரன் மரியாதை செலுத்தினர்.

கோயம்பேட்டில் உள்ள தேமுதிகதலைமை அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த பெரியார் படத்துக்கு அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணை செயலாளர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் பெரியார் படத்துக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மரியாதை செலுத்தினார்.

மநீம தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘நீண்டகாலத்துக்கான பார்வையோடு சிந்தித்து சமூகத்துக்கான தன் தத்துவத்தை அழுத்தம் திருத்தமாக பதிந்து வைத்தவர் பெரியார். அதனாலேயே இன்னும் சமூக எதிரிகள் பெரியாரை அஞ்சும் நிலை தொடர்கிறது. அந்த அறிவின் பெரியாரை நினைவுகொள்வோம்’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x