

ராம்ராஜ் காட்டன் நிறுவனம் சார்பில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு பரிசாக ரூ.20ஆயிரம் கிடைக்கும் என தெரிவித்து வாட்ஸ்-அப் செயலியில் பரவும் தகவலை நம்ப வேண்டாம் என அந்நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து ராம்ராஜ் காட்டன் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடந்த 38 ஆண்டுகளாக நன்மதிப்புடன் இயங்கிவரும் முன்னணி நிறுவனமான எங்களின் நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில், சில விஷமிகள் கடந்த ஒரு வாரமாக வாட்ஸ்-அப் செயலியில், ‘கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பரிசாக ரூ.20 ஆயிரம் கிடைக்கும்’ எனவதந்திகளை பரப்பி ஒரு லிங்க்கை வெளியிட்டு, அது வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
அந்த லிங்க்கை கிளிக் செய்தால் வாடிக்கையாளர்களின் தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட வாய்ப்பு உள்ளது. எனவே இத்தகைய செய்திகளை பரப்ப வேண்டாம்.
வாட்ஸ்-அப்பில் பரவும் செய்திக்கும் எங்கள் நிறுவனத்துக்கும் எந்ததொடர்பும் இல்லை. வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில்கொண்டு, சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் இத்தகைய நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என போலீஸுக்கு ஆன்லைன் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. l