Published : 25 Dec 2021 12:25 PM
Last Updated : 25 Dec 2021 12:25 PM

கோயில் பூசாரியாக நியமிக்கப்பட்டுள்ள சிறுவனுக்கு தடையில்லா கல்வி கிடைக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவு

சென்னை

நீலகிரி மாவட்டத்தில் கோயில் பூசாரியாக நியமிக்கப்பட்டுள்ள 7வயது சிறுவனுக்கு தடையில்லா கல்வி கிடைக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் சிவன் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘ நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நடுஹெட்டியில் பெடாலா எனும் கிராமத்தில் படுகர் இன மக்கள் அதிகமாக வசிக்கும் மலைக்கிராமம் ஒன்றில் அவர்களின் குலதெய்வமான ஹெத்தை அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் கடந்த 1994-ம் ஆண்டு முதல் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு 7 வயது சிறுவன் பூசாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த கோயில் குலவழக்கப்படி பூசாரியாக நியமிக்கப்படுபவர்கள் குறிப்பிட்ட வயது வரை கோயிலை விட்டு வெளியே வரக்கூடாது. உணவை அவர்களே சமைத்து சாப்பிட வேண்டும். கோயில் பசுக்களின் பாலை கறந்து நெய் எடுத்துவிளக்குகளுக்கு பயன்படுத்த வேண்டும். பள்ளிக்கு செல்லக்கூடாது என்ற கடுமையான கட்டுப்பாடுகளால் அந்த சிறுவனின்கல்வி கற்கும் உரிமை பாதிக்கப்பட்டுள்ளது. இது கட்டாயக் கல்வி சட்டத்துக்கு எதிரானது, என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், அரசு ப்ளீடர் பி.முத்துக்குமார், மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் தங்க வந்தனா பாலகிருஷ்ணன், சிறுவனின் பெற்றோர் தரப்பில் வழக்கறிஞர் ஏ.பாப்லி, அறநிலையத்துறை சார்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் டி.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் ஆஜராகி வாதிட்டனர். அப்போது, அரசு தரப்பில் அந்தக்கோயில் மரபுப்படி அந்த சிறுவன் கோயிலை விட்டு வெளியே வரக்கூடாது என்பதால், வீடு தோறும் கல்வி திட்டம் மூலம் தற்போது அந்த சிறுவன் மூன்றாம் வகுப்பு படித்து வருவதாகவும், இதற்காக ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கப்படும் இஎம்ஐஎஸ் எண் அந்த சிறுவனுக்கும் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், பூசாரியாக நியமிக்கப்பட்டுள்ள சிறுவனின் அடிப்படை உரிமைகள் பாதிக்காத வண்ணம் தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும், கல்வி தடையின்றி கிடைப்பதற்கான வாய்ப்புகளையும், ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து கொடுக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டனர். மேலும் சிறுவனது உரிமைகள் மீறப்படுவதாகவோ அல்லது மறுக்கப்படுவதாகவோ தெரியவந்தால் குழந்தைகள் உரிமைகள்பாதுகாப்பு ஆணையத்தை மனுதாரர் அணுகலாம், என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x