

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் தலைமையிலான அக்கட்சியினர் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினர்.
கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநிலக் குழு உறுப்பினர்கள் பா.ஜான்சிராணி, பி.டில்லிபாபு, மத்திய சென்னை மாவட்டச் செயலர் ஜி.செல்வா, மறைந்த ராசாக்கண்ணு மனைவி பார்வதி, முதனை கோவிந்தன், சிதம்பரம் என்.பத்மினி ஆகியோர் தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்தனர்.
அப்போது, இருளர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு குடிமனை, ஜாதிச்சான்று உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அறிவித்தது, நகர்ப்புற மேம்பாட்டு வாரியக் குடியிருப்புக்கு ரூ.1.50 லட்சம் செலுத்த வேண்டுமென்ற விதியை ரத்து செய்தது உள்ளிட்டவைகளுக்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.
பின்னர், முதல்வரிடம் அளித்த மனுவில், "பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு கொள்கைகளை உருவாக்க வேண்டும். பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு குழுக்களை அமைக்க வேண்டும். பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும்.
தமிழகத்தில் மூடப்பட்ட சர்க்கரை ஆலைகளை, உடனடியாக திறக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்த வேண்டும். நுண்நிதி நிறுவனங்கள் சட்டவிரோத முறைகளில் கடன் வசூல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும். ஊரடங்கு காலத்தில் கட்ட வேண்டிய கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். இயல்பு வாழ்க்கை திரும்பும்வரை கடனைத் திருப்பிச் செலுத்த காலஅவகாசம் வழங்க வேண்டும்.
பெண்கள் தொழில் தொடங்க வங்கிகள் மூலம் நிதியுதவி வழங்க வேண்டும். தனித்து வாழும் பெண்கள் புதிதாக தொழில் தொடங்க, குறைந்த வட்டியில் முன்னுரிமைக் கடன் வழங்க வேண்டும்.
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 200 நாட்கள் வேலை, ரூ.600 கூலி வழங்குமாறு மத்திய அரசை வற்புறுத்த வேண்டும். காய்கறிகளை அரசே ரேஷன் கடைகளில் விநியோகிக்க வேண்டும். கந்துவட்டி தடைச்சட்டத்தை கறாராக அமல்படுத்த வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளனர்.