கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு வாடகை நிர்ணயம்; தலைமைச் செயலாளர் தலைமையில் குழு: நிலையான வழிகாட்டு முறைகளை வகுக்கவும் திட்டம்

கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு வாடகை நிர்ணயம்; தலைமைச் செயலாளர் தலைமையில் குழு: நிலையான வழிகாட்டு முறைகளை வகுக்கவும் திட்டம்
Updated on
1 min read

சென்னை: கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு நியாயமான வாடகை நிர்ணயம் செய்வதில் நிலவும் முரண்பாடுகளை களைய தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலுக்கு சொந்தமான வீடுகள், மனைகள், கட்டிடங்கள் மற்றும் கடைகள் ஆகியவற்றுக்கு 2001-ம் ஆண்டு நிலமதிப்பு நிலவரத்தை அடிப்படையாக கொண்டு, கடந்த 2001-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதியில் இருந்து நியாய வாடகை நடைமுறைப்படுத்தப்பட்டது.

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 15 சதவீதம் வாடகையை உயர்வு செய்து வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது எனவும், கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி நிர்ணயம் செய்யப்பட்ட வாடகையானது திரும்ப 2019-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி மறு நிர்ணயம் செய்யப்பட வேண்டும் எனவும் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தனது கடிதங்களில் தெரிவித்துள்ளார்.

மேலும், கோயில்களுக்கு சொந்தமான அசையா சொத்துகளுக்கு எதை அடிப்படையாகக் கொண்டு வாடகை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்பதற்கு நிலையான விதிகள் மற்றும் வழிமுறைகள் வகுக்கப்படாததால் சொத்துகளுக்கான சந்தை மதிப்பு நிர்ணயம் செய்வதில் முரண்பாடுகள் மற்றும் இடர்பாடுகள் எழுவதாகவும், நியாய வாடகை நிர்ணயம் செய்வது தொடர்பாக ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை களையவும் ஒரே மாதிரியான வழிகாட்டு முறைகளை வகுக்கவும் குழு அமைக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கேட்டுக்கொண்டார்.

ஆணையரின் கருத்துருவை கவனமான பரிசீலனை செய்து, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அறநிறுவனங்களுக்கு சொந்தமான மனைகள், வீடுகள், கட்டிடங்கள் மற்றும் கடைகளுக்கு நியாய வாடகை நிர்ணயம் செய்வதில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை களைய ஏதுவாக மற்றும் நியாய வாடகை நிர்ணயம் செய்வது தொடர்பாக குழு அமைக்கப்படுகிறது.

இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டப்பிரிவு 34-ஏ-ன்கீழ் ஒரே மாதிரியான நிலையான வழிகாட்டு முறைகளை வகுக்கவும் அதனடைப்படையில் விதிகளை ஏற்படுத்தி பரிசீலனை செய்து உரிய ஆலோசனை வழங்கவும் அலுவலர்களை கொண்ட குழு அமைத்து அரசு ஆணையிடுகிறது.

குழுவின் தலைவராக தலைமைச் செயலாளர், உறுப்பினர்களாக சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர், வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலாளர், சட்டத் துறை செயலாளர் (சட்ட விவகாரங்கள்), இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், நில நிர்வாகத்துறை கூடுதல் இயக்குநர், கூடுதல் பதிவுத்துறை தலைவர், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் (விசாரணை), இந்து சமய அறநிலையத்துறை தனி அலுவலர் (ஆலய நிலங்கள்), இந்து சமய அறநிலையத்துறை தலைமை பொறியாளர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in