

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமாக பல்வேறு இடங்களில் உள்ள சுமார் 620 ஏக்கர் நிலங்களின் ஆவணங்கள் உட்பட, கோயில் நிர்வாகத்தின் பராமரிப்பில் உள்ள அனைத்து ஆவணங்களும் முதல்முறையாக கணினியில் பதிவேற்றம் செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு, இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் நிலங்களைப் பாதுகாக்க பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இதில், கோயில் நிலங்கள் அனைத்தும் ரோவர் கருவி மூலம் அளவீடு செய்யும் பணிகள் ஏற்கெனவே நடைபெற்று வருகின்றன. மேலும், கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் அதற்கான ஆவணங்கள் அனைத்தும் கணினியில் பதிவேற்றம் செய்து பாதுகாக்கப்படும் என அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அறநிலையத் துறையின் காஞ்சிபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் நகரப்பகுதியில் அமைந்துள்ள கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான சுமார் 620 ஏக்கர் நிலங்களின் பத்திரங்கள், வருவாய் ஆவணங்கள், கோயில் நிர்வாகத்தின் பராமரிப்பில் உள்ள பிற ஆவணங்கள், பதிவேடுகள், நகைகளுக்காக ஆவணங்கள், முதலீடு ஆவணங்கள் உட்பட பல்வேறு ஆவணங்களை ஸ்கேன் செய்துகணினியில் பதிவு செய்வதற்கானபணிகள் நேற்று தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூலம், கோயிலில் பல ஆண்டுகளாக உள்ள ஆவணங்களை முறையாக பாதுகாப்பதற்கான வழி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, கந்தசுவாமி கோயில் செயல் அலுவலர் சக்திவேல் கூறியதாவது: தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் உட்பட நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து ஆவணங்கள் மற்றும் கோயில் நிலங்கள் குறித்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.