Published : 25 Dec 2021 09:08 AM
Last Updated : 25 Dec 2021 09:08 AM

‘வந்தே பாரத்’ சொகுசு ரயில்கள் அடுத்த ஆண்டு முதல் தயாரிப்பு: ஐசிஎஃப் பொதுமேலாளர் ஏ.கே.அகர்வால் தகவல்

சென்னை: வந்தே பாரத் அதிவிரைவு சொகுசு ரயில்கள் அடுத்த ஆண்டு முதல் தயாரிக்கப்படும் என்று ஒருங்கிணைந்த ரயில் இணைப்பு பெட்டி தொழிற்சாலை (ஐசிஎஃப்) பொதுமேலாளர் ஏ.கே.அகர்வால் கூறினார்.

சென்னை ஐசிஎஃப் வளாகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரங்கில் நேற்று முன்தினம் 66-வது ரயில்வேவார விழா நடைபெற்றது.

தெற்கு ரயில்வே முன்னாள் பொதுமேலாளர் வசிஷ்ட ஜோகிரி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, கடந்த ஆண்டு சிறப்பாகப் பணியாற்றிய 298 ஊழியர்கள், அதிகாரிகளுக்கு பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கினார்.

இதில், ஐசிஎஃப் பொதுமேலாளர் ஏ.கே.அகர்வால் பேசும்போது, ‘‘கடந்த ஆண்டு கரோனா பேரிடர் காலத்தில் பல்வேறு சவால்கள் இருந்தும் ஐசிஎஃப் ஊழியர்கள் சிறப்பாகப் பணியாற்றி, சுமார் 2,000 ரயில் பெட்டிகளைத் தயாரித்துள்ளனர்.

அவற்றில், இலங்கை ரயில்வேக்கான ஏற்றுமதி ரயில் பெட்டிகள், நீலகிரி மலை ரயிலுக்கான புதிய வடிவமைப்புடன் கூடிய பெட்டிகள், எல்எஃச்பி வடிவமைப்பிலான புதிய விஸ்டடோம் சுற்றுலாப் பயணிகள் ரயில் பெட்டி, மும்பை புறநகர் ரயில் சேவைக்கான குளிர்சாதன வசதி செய்யப்பட்ட ரயில் பெட்டிகள் போன்றவை அடங்கும்.

மேலும், இலங்கை ரயில்வேயில் இருந்து ரூ.106 கோடி மதிப்பிலான, குளிர்சாதன வசதி செய்யப்பட்ட டீசல்புறநகர் ரயில் மின் தொடர்களை ஏற்றுமதி செய்யவும் ஆர்டர் கிடைத்துள்ளது.

இத்தாலி தரச் சான்றிதழ்

இந்திய ரயில்வேயின் உற்பத்தித் தொழிற்சாலைகளில் முதல்முறையாக, இத்தாலியின் இன்டெர்டெக் ஸ்பா அமைப்பிடம் இருந்து, ரயில்பெட்டிகள்மற்றும் பாகங்களுக்கான வெல்டிங் தொழில்நுட்பத்துக்கு தரச் சான்றிதழ் கிடைத்துள்ளது.

அடுத்த ஆண்டு செப்டம்பர் முதல் ஒரு மாதத்துக்கு 4 முதல் 5 `வந்தே பாரத்' அதிவிரைவு சொகுசு ரயில்கள் தயாரித்து அனுப்பப்பட உள்ளன. அதேபோல, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மேம்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில் உற்பத்தி தொடங்கும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x