கிளப்புகள், மனமகிழ் மன்றங்களில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதை தடுக்க காவல் அதிகாரிகள் தலைமையில் குழு: தமிழக டிஜிபி-க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கிளப்புகள், மனமகிழ் மன்றங்களில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதை தடுக்க காவல் அதிகாரிகள் தலைமையில் குழு: தமிழக டிஜிபி-க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: பதிவு செய்யப்பட்ட கிளப்புகள், மனமகிழ் மன்றங்கள், சங்கங்கள், ஸ்பாக்கள் மற்றும் மசாஜ் சென்டர்களில் சட்டவிரோத செயல்கள் நடைபெறாமல் தடுக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆணையர்கள் தலைமையிலான குழுக்கள் அமைக்குமாறு தமிழக டிஜிபிக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக காஞ்சிபுரம் ரீடிங் ரூம் மற்றும் டென்னிஸ் கிளப் செயலர் கே.கருணாகரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘எங்களது கிளப்புக்கு வரும் உறுப்பினர்கள், டாஸ்மாக் கடைகளிலிருந்து வாங்கி வரும் மதுபானங்களை அருந்துகின்றனர். ஆனால், அவ்வாறு மது அருந்த லைசென்ஸ் பெற வேண்டுமென அரசு அதிகாரிகளும், போலீஸாரும் வலியுறுத்துகின்றனர். எனவே, எங்களது கிளப்பின் அன்றாடப் பணிகளில் போலீஸார் தலையீடக் கூடாது என உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், "பொதுஇடங்களில் மது அருந்த தடைசெய்யப்பட்டுள்ளது. அந்த தடையை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு அதிகாரம் உள்ளது. படிப்பகம் மற்றும் டென்னிஸ் கிளப் என பெயர் வைத்துவிட்டு, அந்த நோக்கத்தில் இருந்து விலகி மதுபானம் என பிற செயல்பாடுகளுக்காக அந்த இடம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மதுபானம் அருந்தும் இடத்துக்கு கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இதுபோன்ற சங்கங்கள், கிளப்புகள், மனமகிழ் மன்றங்கள், மசாஜ் சென்டர்கள் சட்டரீதியாகப் பதிவு செய்திருந்தாலும், அவற்றின் நோக்கத்தில் இருந்து விலகி பிற காரியங்களில் ஈடுபட்டால், அவற்றின் பதிவுகளை ரத்து செய்ய பதிவுத் துறைக்கு அதிகாரம் உள்ளது.

எனவே, கிளப்புகள், சங்கங்கள் உள்ளிட்ட இடங்களில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுகிறதா என்பதைக் கண்காணித்து, உரியநடவடிக்கை எடுக்க அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள் தலைமையில் தனி குழுக்களை அமைக்குமாறு தமிழக டிஜிபிக்கு உத்தரவிடுகிறோம். இது தொடர்பாக டிஜிபி 4 வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்" என்று தெரிவித்து, விசாரணையை வரும் ஜன. 24-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

படிப்பகம் மற்றும் டென்னிஸ் கிளப் என பெயர் வைத்துவிட்டு, அந்த நோக்கத்தில் இருந்து விலகி மதுபானம் என பிற செயல்பாடுகளுக்காக அந்த இடம் பயன்படுத்தப்பட்டு வருகிறது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in