

சென்னை: வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு ரூ.24.24 கோடியில் சூரிய கூடார உலர்த்தி, சூரிய சக்தி பம்ப்செட், மதிப்பு கூட்டு இயந்திரங்கள், வேளாண் உபகரண தொகுப்புகள் வழங்கும் திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வேளாண் துறை சார்பில் ரூ.9.24 கோடியில் 672 விவசாயிகள் பயன்பெறும் வகையில் சூரிய கூடார உலர்த்திகள் அமைத்தல், சூரிய மின்வேலி அமைத்தல், சூரியசக்தியால் இயங்கும் பம்ப்செட்கள் அமைத்தல், வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டும் இயந்திரங்கள் வழங்குதல் ஆகிய திட்டங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து, 9 விவசாயிகளுக்கு இவற்றை வழங்கினார்.
இந்த திட்டங்களின் கீழ் எண்ணெய் வித்துக்கள், பழவகைகள், வாசனை பொருட்கள்,மூலிகை செடிகள் போன்றவற்றை உலரவைக்க, பசுமைக் குடில் வகையிலான 400 முதல் 1,000 சதுரஅடி பரப்பு கொண்ட பாலி கார்பனேட் தகடுகளால் ஆன சூரியகூடார உலர்த்திகள் அமைக்கப்படும்.
இந்த ஆண்டில் ரூ.2 கோடியில் 115 விவசாயிகள் பயன்பெறும் வகையில் சூரிய கூடார உலர்த்திகள் அமைக்கப்படும். இதற்கான செலவில் 40 சதவீத மானியம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில்பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.
பயிர்களை ஆடு, மாடு, காட்டுப் பன்றி, காட்டெருமை, மான், யானை போன்ற விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க மானிய விலையில் சூரிய மின்வேலிகள் அமைக்கப்படும். யானைகள் தவிர்த்த பிற விலங்குகளுக்கு 5, 7, 10 ஆகிய வரிசையிலும், யானைகளுக்கு கூடுதலாக தொங்கும் மின்வேலி அமைப்பு 5, 7, 10 ஆகியவரிசைகளை கொண்டும் அமைக்கப்படும். ஒரு விவசாயி அதிகபட்சமாக 2 ஹெக்டேருக்கு 566 மீட்டர் நீளம் வரை மானியம்பெறலாம். இதற்கான செலவில் 40 சதவீத மானியம் வழங்கப்படும். இந்த ஆண்டில் ரூ.1.50 கோடியில் 130 விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
இந்த ஆண்டில் 70 சதவீத மானியத்தில் 171 விவசாயிகளுக்கு ரூ.3.81 கோடியில் சூரியசக்தி பம்ப்செட் அமைக்கப்படும். ரூ.192 கோடியில் 256 விவசாயிகளுக்கு மானியத்தில் மதிப்பு கூட்டு இயந்திரங்கள் வழங்கப்படும். தனிப்பட்ட விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், சுயஉதவி குழுக்கள், தொழில் முனைவோருக்கு 40 சதவீத மானியம் வழங்கப்படும்.
சென்னை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் https://mis.aed.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக திட்டங்கள் பற்றிய விவரங்களை அறிந்து விண்ணப்பிக்கலாம்.
உபகரண தொகுப்பு
வேளாண்மை, உழவர் நலத் துறை சார்பில் 64,444 வேளாண் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ரூ.15 கோடியில் கடப்பாரை, இரும்புச்சட்டி, களைக்கொத்து, மண்வெட்டி, கதிர்அரிவாள் ஆகியவேளாண் உபகரண தொகுப்புகள் வழங்கப்படுகின்றன. தலைமைச் செயலகத்தில் 5 வேளாண் குடும்பங்களுக்கு இந்த உபகரணங்களை வழங்கி, இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இத்திட்டம் மூலம் பொது விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் அல்லது ரூ.2,250-க்கு மிகாமலும், ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு 90 சதவீத மானியம் அல்லது ரூ.2,700-க்கு மிகாமலும்
வேளாண் உபகரண தொகுப்பு வழங்கப்படும். ஒரு வேளாண் குடும்பத்துக்கு ஒரு தொகுப்பு மட்டுமே வழங்கப்படும்.
பணி நியமனம்
வேளாண்மை, உழவர் நலத் துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 87 பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி ஆணை வழங்கும் அடையாளமாக 10 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், தலைமைச் செயலர் இறையன்பு, துறை செயலர் சமயமூர்த்தி, இயக்குநர் அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.