

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள். இதுதவிர, பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் இருந்து நேற்று ஏராளமானோர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.
இதற்கிடையில், காட்பாடி அருகே ரயில்வே பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், அந்த வழியில் செல்லும் 65-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், ரயில்களில் செல்ல திட்டமிட்டிருந்த பலரும் வேறு வழியின்றி அரசு, தனியார் பேருந்துகளில் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இதனால், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், ஆம்னி பேருந்து நிலையத்தில் வழக்கத்தைவிட நேற்று கூட்டம் அதிகமாக இருந்தது. பயணிகள் செல்ல வசதியாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் 700-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, ‘‘கிறிஸ்துமஸ், தொடர் விடுமுறையை கருத்தில் கொண்டு கடந்த 2 நாட்களாக சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறோம். பெங்களூரு, வேலூர், கோயம்புத்தூர், சபரிமலை செல்லும் வழித்தடங்களில் கூடுதல் விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 24-ம் தேதி (நேற்று) வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன’’ என்றனர்.