

சிவகங்கை அருகே ரூ.23.50 லட்சம் வழிப்பறி செய்த சம்பவத் தில் திடீர் திருப்பமாக இரிடியம் தருவதாக நாடகமாடி ஏமாற்றியது தெரிய வந்தது. இது தொடர்பாக 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தேவகோட்டை அருகே உள்ள சருகணியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவர் அப்பகுதியில் விவசாய நிலம் வாங்கியுள்ளார். இந்த நிலத்தை பத்திரப் பதிவு செய்வதற்காக முனியாண்டியின் சகோதரர்கள் நேசநேரி கிராமத்தைச் சேர்ந்த குருசாமி(43), ஆறுமுகம்(40) ஆகியோர் ரூ.23.50 லட்சத்துடன் காரில் நேற்று முன்தினம் சருகணிக்கு வந்தனர்.
இவர்களுடன் நிலத்தரகர் திருச்சியைச் சேர்ந்த அப்துல் ரகுமான்(60), உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த சாமி நாதன்(60) ஆகியோரும் வந்தனர். காரை சருகணியைச் சேர்ந்த பாண்டியராஜ் ஓட்டி வந்தார். இந்நிலையில், செல்லும் வழியில் அய்யனார் கோயில் அருகே நிலம் ஒன்றை பார்க்கச் சென்ற போது, தங்களிடமிருந்த ரூ.23.50 லட்சத்தை சிலர் வழிப்பறி செய்ததாக சிவகங்கை தாலுகா போலீஸாரிடம் ஆறுமுகம் புகார் தெரிவித்தார்.
இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், ஆறுமுகம் கூறிய தகவலில் முழு உண்மை இல்லை என்பதும், இச்சம்பவத்தில் ஆறுமுகம் சகோதரர் உட்பட 9 பேருக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸார் கூறியதாவது: பத்திரப்பதிவுக்காக வந்த ஆறுமுகத்திடம் கோயில் கலச இரிடியம் விற்பனைக்கு இருப்பதாக சகோதரர் குருசாமி, தரகர்கள் அப்துல்ரகுமான், சாமிநாதன், ஓட்டுநர் பாண்டிராஜ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதை ஆறுமுகம் நம்பியதும், அவரை சித்தலூர் அய்யனார் கோயிலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் நிலத்தரகர் முனியாண்டி என்பவர் வந்துள்ளார். அதைத் தொடர்ந்து டி.வேலாங்குளத்தைச் சேர்ந்த பூச்சி இருளப்பன்(45), மாத்தூரைச் சேர்ந்த அஜீத்குமார்(24), ரமேஷ் (26) ஆகியோர் முகமூடி அணிந்து வந்து பணத்தை வழிப்பறி செய்துள்ளனர்.
இதற்கு புதுக்குளத்தைச் சேர்ந்த இருளப்பன்(25), வேலூரைச் சேர்ந்த பாண்டித்துரை(38), சரு கணி போரடப்பைச் சேர்ந்த பாண்டியராஜன்(42) ஆகியோரும் உதவியுள்ளனர். மேலும் இரிடியம் வாங்க வந்ததாகக் கூறினால் போலீஸார் தம்மை கைது செய்துவிடுவர் எனப் பயந்து, இடம் பார்க்கச் சென்றதாக ஆறுமுகம் பொய் சொல்லியுள்ளார் என்றனர்.