

கோவை: கோவையில் பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவ, மாணவிகள் இன்று (டிச.24) போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அரசுப்பள்ளி ஆசிரியர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை வெள்ளலூரில், பேருந்து நிறுத்தம் அருகே, அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஏராளமான எண்ணிக்கையில் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியில் உயர்நிலைப் பிரிவில், கணினி அறிவியல் பிரிவில் ஆசிரியராக விஜய்ஆனந்த்(40) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக கூறி, உயர்நிலைப்பிரிவைச் சேர்்ந்த மாணவ, மாணவிகள் இன்று (டிச.24) மதியம் பள்ளி முன்பு அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்துக்குள், தலைமை ஆசிரியை அருகே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
ஆபாச தகவல் அனுப்புதல்
இதுகுறித்து தகவல் அறிந்த போத்தனூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் விசாரித்தனர். மாணவ, மாணவிகள் தரப்பில் கூறும்போது,‘‘ இப்பள்ளியில் கணினி அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வரும் விஜய்ஆனந்த் என்பவர், உயர்நிலைப்பிரிவில் படிக்கும் மாணவிகளிடம் பாடங்கள் தொடர்பாக ஆலோசனை கூறுகிறேன் என்ற பெயரில் இரட்டை அர்த்தத்துடன் ஆபாசமாக பேசுவது, தவறான இடத்தில் தொடுவது, வாட்ஸ் அப்பில் அவதூறான, ஆபாசமான குறுந்தகவல்கள் அனுப்புவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றார். இதுதொடர்பாக, பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் புகார் அளித்தார். அவர் இதுதொடர்பாக விசாரித்தார். இதைத் தொடர்ந்து ஆசிரியர் பள்ளிக்கு வருவதில்லை. ஆனால், இவர் மீதான புகார் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.
போலீஸார் விசாரணை:
இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் போலீஸார், கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். நடந்த சம்பவம் தொடர்பாக, விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் சில மணி நேரங்களுக்கு பின்னர் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். இதற்கிடையே, பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து தொடர்புடைய ஆசிரியர் விஜய்ஆனந்த்தை பணியிடை நீக்கம் செய்து, கல்வித்துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கிழக்குப்பகுதி மகளிர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.