ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்யப் பரிந்துரைக் குழு: ஜவாஹிருல்லா வரவேற்பு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: ஆயுள் தண்டனைக் கைதிகளைப் பரிந்துரைகளின் அடிப்படையில் விடுதலை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்துள்ள தமிழக அரசின் நடவடிக்கைக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்த சிறைவாசிகளை விடுதலை செய்வது தொடர்பாகத் தமிழக அரசு கடந்த நவம்பர் 15 அன்று அரசாணை ஒன்றை வெளியிட்டது. இந்த அரசாணையில் முன் விடுதலைக்காக விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகள் 20 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பல சிறைவாசிகள் விடுதலையாவது கேள்விக்குறியாக அமைந்திருந்தது.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினிடம் கவனத்திற்குக் கொண்டுசென்று 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்நாள் சிறைவாசம் அனுபவித்தவர்கள் விடுதலை செய்யப்படுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் நேரில் கோரிக்கை வைத்தோம்.

இதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் வாழ்நாள் சிறைவாசிகளை மனிதாபிமான அடிப்படையில் தண்டனையைக் குறைத்து அவர்களின் நன்னடத்தை, உடல் நிலை, மனநிலை, உடல் ஆரோக்கியம், தற்போதுள்ள சூழ்நிலை என அனைத்தையும் அறியும் வகையில் முன் விடுதலை செய்வது குறித்துப் பரிந்துரை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் வெளியிடப்பட்ட அரசாணைகள் மூலம் பயன்பெற முடியாத 10 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வரும் வாழ்நாள் சிறைவாசிகளை மனிதாபிமான அடிப்படையில் முன்விடுதலை செய்ய வழிவகுப்பதற்காக இந்தக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த கால பாரபட்சங்களினால் கண்ணீர் நிரம்பிய சிறைவாசிகள் குடும்பத்தினரின் இல்லங்களில் மகிழ்ச்சி சூழ, நீதிபதி ஆதிநாதன் குழு விரைவில் வழிவகுக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. இக்குழு விரைந்து குறுகிய காலத்திற்குள் தனது பரிந்துரையை அளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்" என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in