

தங்க நகைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கலால் வரியை ரத்து செய்யக் கோரி நகைக் கடை உரிமையாளர்கள் நேற்று 12-வது நாளாக நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி மற்றும் சென்னை தி.நகரில் மட்டும் சில கடைகள் திறக்கப்பட்டன.
மத்திய பட்ஜெட்டில் முதல் முறையாக தங்க நகைகளுக்கு ஒரு சதவீதம் கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் உள்ள 358 நகை கடை உரிமையாளர்கள் சங்கங்கள் கடந்த 2-ம் தேதி முதல் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதன் காரணமாக நாடு முழுவதும் சுமார் 2 லட்சம் கடைகள் மூடப் பட்டுள்ளன.
போராட்டம் 12-வது நாளாக நேற்றும் தொடர்ந்த நிலையில் சென்னை தி.நகரில் 25க்கும் மேறப்பட்ட நகைக்கடைகள் திறக்கப்பட்டன. இதனால், அந்த கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதே நேரத்தில் புரசைவாக்கம், மயிலாப்பூர், பிராட்வே, வண் ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங் களில் கடைகள் மூடப்பட்டி ருந்தன. புதுச்சேரியில் நகைக் கடை உரிமையாளர்கள் கடை யடைப்பு போராட்டத்தை தற்காலி கமாக வாபஸ் பெற்றதால் நேற்று கடைகள் திறந்திருந்தன.
இதுகுறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறும்போது, “தங்க நகைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள ஒரு சதவீத கலால் வரியை நீக்க கோரி கடந்த 2-ம் தேதி முதல் நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகிறோம். எங்களின் கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். எங்களின் கோரிக்கை குறித்து ஆலோசித்த மத்திய அரசு இதற்கு மாற்றுவழியை கூறுமாறு சொன்னது. அதன்படி நாங்கள் மாற்றுவழியை தெரி வித்துள்ளோம்.
மாற்றுவழி குறித்து ஆலோசித்து அறிவிக்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது. எனவே, நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம். இதற்கிடையே, வரும் 17-ம் தேதி டெல்லியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். எங்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கும் வரையில் போராட்டம் தொடரும்” என்றார்.