

கோவை: பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ மீது காலணி வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக எம்எல்ஏக்கள் மேற்கு மண்டல காவல்துறை தலைவரிடம் (மேற்கு மண்டல ஐஜி) நேற்று (டிச.23)புகார் அளித்தனர்.
முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தலைமையில், அதிமுக எம்எல்ஏக்கள் செ.தாமோதரன், ஏ.கே.செல்வராஜ், பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன், வி.பி.கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம் மற்றும் கட்சி நிர்வாகிகள் ரேஸ்கோர்ஸில் உள்ள மேற்கு மண்டல ஐஜி அலுவலகத்துக்கு வந்தனர். ஐஜி சுதாகரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில்,‘‘ கோதவாடி குளம் பிஏபி பாசன திட்டத்தின் கீழ் தண்ணீர் நிரப்பப்படும். அதிமுக ஆட்சியில் குளம் தூர்வாரப்பட்டு, பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ முயற்சியால் குளம் முழுமையாக நிரப்பப்பட்டது. குளம் நிரம்பியதால் கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ஊர் பொதுமக்கள் அந்த குளத்தின் ஓரம் உள்ள காளியம்மனுக்கு பொங்கல் வைத்து கொண்டாடினர். குளத்தை பார்வையிட தொகுதி எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் கடந்த 21-ம் தேதி சென்றார். அப்போது அவரை திமுகவினர் முற்றுகையிட்டு காலணி வீசி அநாகரிகமாக நடந்து கொண்டனர். எம்எல்ஏ தனது சொந்த தொகுதிக்கு செல்லக்கூடாது என்று கூறி தடுப்பது கண்டனத்துக்கு உரியது. மேலும், பாதிக்கப்பட்ட பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அவருடன் சென்றவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே தாங்கள் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கிற வகையில் எம்எல்ஏவை பணி செய்யவிடாமலும், அவருடைய கடமையை செய்ய விடாமலும் தடுத்து கற்கள், காலணி வீசிய திமுகவை சார்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்கையும் ரத்து செய்ய வேண்டும்,’’ எனக் கூறப்பட்டு இருந்தது.
செய்தியாளர்களுடன் சந்திப்பு
இதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறும்போது‘‘ கோதவாடி குளக்கரை கோயிலுக்கு பொள்ளாச்சி ஜெயராமன் சென்ற போது, திமுகவை சேர்ந்தவர்கள், அரசு பதவிகளில் இல்லாதவர்கள் அங்கு வந்து தகாத சம்பவத்தை நிகழ்த்தி மோசமான செயலில் ஈடுபட்டுள்ளனர். அதன்பிறகு பொள்ளாச்சி ஜெயராமன் மீதும் வழக்குப்போட்டுள்ளனர். எம்எல்ஏ என்ற முறையில் அவர் பார்வையிடுவதற்காக சென்றார். இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார். தற்போது கோவை மாவட்டத்தில் இருக்கும் அதிமுக தொண்டர்கள், எம்எல்ஏக்கள் மீது திமுக ஏவலின்பெயரில் தொடர்ந்து பொய் வழக்குகளை போலீஸார் பதிந்து வருகின்றனர். ஆனால் அங்கு நடந்த சம்பவத்தில் திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. எனவே பொய் வழக்கை கண்டித்து, இதற்கு நியாயம் வேண்டும் என்று கேட்டும் ஐஜியிடம் அனைத்து எம்எல்ஏக்களும் மனு அளித்து உள்ளோம். நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறி உள்ளார்,’’ என்றார்.