

சென்னை பல்கலைக்கழகத்தில் தவறான வழியில் பட்டம் பெற முயன்ற 117 பேரின் தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இது
குறித்து விசாரணை நடத்த சிண்டிகேட் உறுப்பினர்கள் தலைமையில் குழு அமைக்கப்படும் என்று துணைவேந்தர் எஸ்.கவுரி தெரிவித்தார்.
கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு கல்லூரி வகுப்புகள், செமஸ்டர் தேர்வுகள் இணையவழியில் நடத்தப்பட்டன. நீண்ட காலம் அரியர் வைத்திருந்த மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத, கடந்த டிசம்பரில் சிறப்பு தேர்வும் நடத்தப்பட்டது.
வழக்கம்போல, செமஸ்டர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதற்கு முன்பு, தேர்வு கட்டணம், கல்விக் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை அவர்கள் செலுத்திவிட்டார்களா என்றுஆய்வு செய்யப்பட்டது.
அப்போது, சிறப்பு தேர்வு எழுதி தேர்ச்சி வழங்கப்பட்ட 117 பேரின் விவரங்கள் சேர்க்கை ஆவணங்களிலேயே இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் தொலைதூரக் கல்வியில் சேராமலேயே முறைகேடாக தேர்வை மட்டும் எழுதி பட்டப் படிப்பு சான்றிதழ் பெற முயன்றது தெரியவந்தது.
இந்த நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டம் நேற்று நடைபெற்றது. துணைவேந்தர் எஸ்.கவுரி தலைமையில், பதிவாளர் (பொறுப்பு) என்.மதிவாணன் முன்னிலையில் நடந்த இக்கூட்டத்தில் 25-க்கும் மேற்பட்டஉறுப்பினர்கள் கலந்துகொண்டனர். பின்னர், செய்தியாளர்களிடம் துணைவேந்தர் கவுரி கூறியதாவது:
சிண்டிகேட் கூட்டத்தில் பாடத் திட்டம், ஆராய்ச்சி மேம்பாடு உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்துஆலோசிக்கப்பட்டது.
தொலைதூரக் கல்வி திட்டம்,அரியர் மற்றும் தேர்வு முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும். முறைகேட்டில் ஈடுபட்ட 117 பேரின் தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து விசாரணை நடத்தசிண்டிகேட் உறுப்பினர்கள் தலைமையில் குழு அமைக்கப்படும். இக்குழுவில் 3 முதல் 5 உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள். வருங்காலத்தில் இத்தகைய முறைகேடுகள் நடக்காமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.